சோழநாட்டுச் சீர்மை & திருவாரூர்ச் சிறப்பு

மனு முறைகண்ட வாசகம்

சோழநாட்டுச் சீர்மை & திருவாரூர்ச் சிறப்பு

காப்பு
நேரிசை வெண்பா

அன்ன வயல்சூ ழணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப்-பன்னுதற்கு
நேய மிகத்தா னினைப்போர்க் கருள்புழைக்கைத்
தூய முகத்தான் துணை.

கங்கைச் சடையான்முக் கண்ணுடையா னன்பர்தம்முள்
அங்கைக் கனிபோ லமர்ந்திருந்தா-னங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை,

1. சோழநாட்டுச் சீர்மை

கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், – காவிரி யென்னுந் தெய்வத் தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்ப முள்ளதாய், வாழைச்சோலை, பலாச் சோலை, மாஞ் சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ் சோலை,கருப்பஞ் சோலை முதலிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க, அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருக்ஷங்களால் நெருங்கப்பெற்று வண்டுகள் பாடுகின்ற மலர்ச் சோலைகளும், தாமரைத் தடாகங்களும், அல்லி, நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற ஓடைகளும், பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய்,

சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்விய க்ஷேத்திரங்கள் இடையிடையி லுள்ளதாய் இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக் கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழ தேசத்தில்.

2. திருவாரூர்ச் சிறப்பு

பாதாள லோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமுள்ள அகழியினால் சூழப்பட்டு இந்திரலோகத்தை எட்டிப் பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம், நந்தவனம், பூஞ்சோலை முதலானவைகளும், தெய்வதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வசந்த வோடை, செங்குவளை யோடை முதலான நீர்நிலைகளு முள்ளதாய்;-

தேர் நிலைகள், யானைக் கூடங்கள், குதிரைப் பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தான மண்டபம், அரச மண்டபம், வினோத மண்டபம், நியாயமண்டபம், கல்வி மண்டபம், பாடல் மண்டபம், பரிசன மண்டபம், சித்திர மண்டபம், நிருத்த மண்டபம், விசித்திர மண்டபம், கணக்கறி மண்டபம், தேவா சிரிய மண்டபம், சித்திரத் தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதச்சாலை, அமுதச்சாலை, அறச்சாலைகளுடையதாய் இரத்னப் பீடிகை களும் கனக மாளிகைகளும், பளிங்கு மாடங்களும், மணிப் பந்தல்களும், மகர தோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர் வீதி, சைவர்வீதி, சைவியர் வீதி, அரசர் வீதி, அந்தணர் வீதி, ஆதி சைவர் வீதி, சூத்திரர் வீதி, வைசியர் வீதி, தபோனர் இருக்கை, சைவ முனிவர் மடம், உட்சமயத் தாருறையுள் முதலான வளப்பங்களையுடையதாய்.

தியாகராஜப் பெருமான் எழுந்தருளிய கமலாலய மென்னுந் திருக்கோயிலை உள்ளேயுடைதாய், சோழ ராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்குரிய ராஜ தானியாய், நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம்போல் விளங்கியது திருவாரூர் என்கின்ற நகரம்.