மூன்று சுடர்களிலும் முதற் சுடராகிய மேன்மை யடைந்த சூரிய குலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழ ராஜர்களில் சிறந்தவராய்;- அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய்;- உயிருக்குறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையவராய்:- எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய் வேதமோதுதலும், யாகம் செய்தலும், இரப்பவர்க் கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலு மென்னும் ஆறு தொழில்களும்,- வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள்ள மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையு முடையவராய்,- வழக்கை அறிவிப்பவரையும், தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக் கொள்பவரையும், இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய்;- பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனிய வசனஞ் சொல்லுகின்றவராய்.
பின் வருவதை முன்னே அறிந்து கொள்வதும், உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் கால வேற்றுமையாலும் குண வேற்றுமையாலும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வது மாகிய விவேகமுள்ளவராய்;- அகங்காரம், காமம், கோபம், லோபம், மோகம், பொறாமை, வஞ்சகம், டம்பம், வீண்செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய், துற்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையும் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத் தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தலும், பகைவலியும், தன்வலியும், துணை வலியும், கால நிலைமையும், இட நிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும் அடுத்தவர்களது குணம், வல்லமை, ஊக்கம் முதலான தன்மைகளை, ஆராய்ந்து, தெளிந்து அவரவர் தரங்களுக்குத்தக்க உத்தியோகங்களை அவரவர்களுக்குக் கொடுத்தும்; பழமை பாராட்டியும்: சுற்றந் தழுவியும்: கண்ணோட்டம் வைத்தும்; ஜாதி இயற்கை, ஆசிரம இயற்கை, சமய இயற்கை, தேச இயற்கை, கால இயற்கை முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும், நல்லொழுக்கத்துடன் நடப்பவராய்;-
குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மன முருகுவதனால் தாயை யொத்தவராய், அத்துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையையொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய், அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று, அதுபற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால், அந்தக் குற்றத்துக்குத்தக்க தண்டனை விதித்து அவ்வழியில் பின்னும் நடத்துகின்ற படியாலுந் தெய்வத்தை யொத்தவராய்;- குடிகளுக்கு ஆபத்து நேரிடும் போது “கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல்” உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி கை கொடுப்பதனால் சினேகனை யொத்தவராய்:-
நல்ல காரியமிது, கெட்ட காரியமிது வென்று காட்டுகின்ற படியால் கண் போன்றவராய்; குடிகளுக்கு அச்சம், அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்ற வராய்: குடிகள் தம்மை நினைக்குந்தோறும் “இப்படிப்பட்ட நற்குண நற்செய்கைகளையுடைய புண்ணிய மூர்த்தியை அரசனாகப் பெற்ற நமக்குக் குறையொன்று மில்லை” என்று களிக்கின்றபடியால் பொன் புதையலை யொத்தவராய்: கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தையொத்த வராய்:-
அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பக மாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்ட படியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு பொருளும் அடைதற் குரிய நான்கு மார்க்கமே நான்கு முகமாகவுங் கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிற படியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினா சக்கரமே சக்கராயுத மாகவும் செங்கோலே திருமக ளாகவும் சிறந்த பெரும் புகழே திருப்பாற்கடலாகவும் யுக்த மல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோக நித்திரையாகவுங் கொண்டு மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை தூய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாகவும், துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரகஞ் செய்து வருகின்ற படியால் உருத்திரமூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ளபடியால் அமிர்தத்தை யொத்தவராய்:- சிவபக்தியில் மிகுந்தவராய்,- பொறுமையில் பூமியை யொத்தவராய்;- தருமமே உருவாகக் கொண்டு நடு நிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனுச்சோழ ரென்னும் பெயரையுடைய சக்ரவர்த்தியானவர்.
கலிங்கர், குலிங்கர், வங்கர், கொங்கர், அச்சியர், கொச்சியர், தெங்கணர், கொங்கணர், தெலுங்கர் முதலான தேசத்தரசர்களெல்லாம், திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடைநிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில், உலகமெங்கும்,- புலியும் பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருந்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப்பறந்தும், பூனையும் எலியும் பொருந்தியிருந்தும், இந்தப்படி மற்றுமுள்ள விரோத மாகிய உயிர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும்:- மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும், வாடுதல், உலர்தல், உதிர்தல், வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந் தோங்கி வாழ்ந்திருக்கவும்: பெருங்காற்று, பெருவெள்ளம், பெருமழை, தீப்பற்றல், இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல், சுகுணமான காற்றும், மிதமான வெள்ளமும், பருவமழையும், தவறாமலுண்டா யிருக்கவும், பசிநோய், உடம்பு நோய், அவமிருத்து, உயிரச்ச முதலான துக்கங்க ளொன்றுஞ் சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும்; பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ரென்கின்ற ஜாதியாரும், பிரமசாரி, கிரகஸ்தன், வானப் பிரஸ்தன், சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர், வைணவர், வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவு படாமல் வாழ்ந்திருக்கவும்:-
அன்னதானம், சொர்ணதானம், கோதானம், பூதானம் முதலான தானங்களும், – தேவாலயங் கட்டு வித்தல், திருக்குள மெடுத்தல், செழுஞ்சோலை வைத்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், – தியானஞ் செய்தல், ஜெபஞ் செய்தல் முதலான தவங்களும் தவறுபாடமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும், மற்றுமுள்ள தெய்வங்களுக்கும், திரிகால பூசைகளும், திருப்பணிகளும், திருவிழா முதலான சிறப்புக்களும் குறைவில்லாமல் நடக்கவும் – அவர் ஆளுகைக்கு உட்பட்ட உலகங்களில், ஆக்கினையே செய்வித்து வந்தது.
அவரது ஒப்புயர்வில்லா அரசாட்சியிலே, பூவே பறிபடுவது; புனலே சிறைபடுவது: காற்றே அலைபடுவது; கல்லே கடினமுடையது; மாவே வடுபடுவது ; வாழையே குலைபடுவது; வண்டே மதுவுண்பது பந்தே அடிபடுவது; பரியே கட்டுண்பது; நெல்லே குத்துண்பது; நெற்கதிரே போர்படுவது;- வயலே வளைபடுவது;- மாதரிடையே குறைபடுவது. தரித்திரமே தரித்திரப்படுவது;. துக்கமே துக்கப்படுவது; பொய்யே பொய்படுவது; இவையல்லாமல் பொருள் பறிக்கப்படுவோரும், சிறைச் சாலையில் வைக்கப்படுவோரும், பகைவரால் அலைக்கப்படுவோரும், கடின மனமுள்ளவர்களும், வடுப்படுவோரும், குலைபடு வோரும், மதுவுண்போரும், அடிபடுவோரும், கட்டுண் போரும், குத்துண்போரும், போரிற்படுவோரும், வளை படுவோரும், குறைபடுவோரும், தரித்திரப் படுவோரும், துக்கப்படுவோரும், பொய்படுவோரும், வேறேயில்லாமல் மேன்மையே விளங்கியிருந்தது.