திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
2. பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
3. வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
4. பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
5. அப்பணி முடி204 என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
6. முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
7. இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
8. அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
9. இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீ தரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடிய தும்இலை ஈண்டே.
10. செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
11. பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
12. கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
13. இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
14. சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
15. இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.
16. சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
17. உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.
18. எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.
19. உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
20. திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
21. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
22. கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
23. மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
24. இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.