திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
2. கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
3. இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
4. கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
5. நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
6. நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
7. மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
8. அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
9. விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
10. அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.