திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
2. தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
உற்றிலை பெற்றவர்க் கழகோ.
3. தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
எந்தைநின் திருவருட் கழகோ.
4. அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்
கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
5. வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
ஈன்றவர் அறிவரே எந்தாய்.
6. வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
நீயும்இங் கறிந்திலை யேயோ.
7. தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல
இருப்பதோ நீயும்எந் தாயே.
8. துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
9. காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
கனிவிலாள் காமமா திகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
பயம்புரி வித்தனள் பலகால்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
திருமதி எனநினைந் தறியாள்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
தந்தது சாலும்எந் தாயே.
10. ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
மாமணி மன்றில்எந் தாயே.