Thirumun Vinnappam

திருவருட்பா

ஆறாம் திருமுறை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.

2. பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.

3. விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
எஞ்சு றாதபே ரின்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளுமாறே.

4. ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.

5. இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறுமாறே.

6. சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.

7. விளங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறுமாறே.

8. வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.

9. மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.

10. தீட்டு பொன்னணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
வாட்டும் இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடுமாறே.