திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
உளஎலாம் ஆங்கவன் தனக்கே
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
செயலிலேன் எனநினைத் திருந்தேன்
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
2. நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
நினைப்பற நின்றபோ தெல்லாம்
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
என்செயல் என்னஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
3. களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
தெளித்தனன் செய்கைவே றறியேன்
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
4. உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
5. களவிலே களித்த காலத்தும் நீயே
களித்தனை நான்களித் தறியேன்
உளவிலே உவந்த போதும்நீ தானே
உவந்தனை நான்உவந் தறியேன்
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
6. திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
உவப்பிலேன் உலகுறு மாயைக்
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
7. சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
8. பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
9. ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
ஊழிதோ றுழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
இயல்அருட் சித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
10. கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
றோங்குதல் என்றுவந் துறுமோ
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.