திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன்
திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான்
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி
உள எலாம் ஆங்கு அவன்றனக்கே
தெரு எலாம் அறியக் கொடுத்தனன் வேறு
செயல்_இலேன் என நினைத்திருந்தேன்
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே
அடிக்கடி உரைப்பது என் நினக்கே.
2. நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன்
நினைப்பு அற நின்ற போது எல்லாம்
எனைத் தனி ஆக்கி நின்-கணே நின்றேன்
என் செயல் என்ன ஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
சிவன் செயலாம் எனப் புரிந்தேன்
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே
அடிக்கடி உரைப்பது என் நினக்கே.
3. களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே
களித்தனன் கண்கள் நீர் ததும்பித்
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே
துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே
தெளித்தனன் செய்கை வேறு அறியேன்
ஒளித் திருவுளமே அறிந்தது இ அனைத்தும்
உரைப்பது என் அடிக்கடி உனக்கே.
4. உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என்
குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது
உரைப்பது என் அடிக்கடி உனக்கே.
5. களவிலே களித்த காலத்தும் நீயே
களித்தனை நான் களித்து அறியேன்
உளவிலே உவந்த போதும் நீ-தானே
உவந்தனை நான் உவந்து அறியேன்
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும்
குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
அடிக்கடி உரைப்பது என் நினக்கே.
6. திலக வாள் நுதலார்-தமைக் கனவிடத்தும்
சிறிதும் நான் விழைந்திலேன் இந்த
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும்
உவப்பு இலேன் உலகுறு மாயைக்
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ
கடவுளே எனத் துயர்ந்து இருந்தேன்
அலகு_இலாத் திறலோய் நீ அறிந்தது நான்
அடிக்கடி உரைப்பது என் நினக்கே.
7. சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான்
உரைப்பது என் அடிக்கடி உனக்கே.
8. பித்து எலாம் உடைய உலகர்-தம் கலகப்
பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க
சங்கம் என்று ஓங்குமோ தலைமைச்
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ
தெரிந்திலேன் எனத் துயர்ந்து இருந்தேன்
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது
உரைப்பது என் அடிக்கடி உனக்கே.
9. ஒன்று எனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ
ஊழி-தோறு ஊழி சென்றிடினும்
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ
இயல் அருள் சித்திகள் எனை வந்து
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே
உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன்
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும்
உரைப்பது என் அடிக்கடி உனக்கே.
10. கள்ள வாதனையைக் களைந்து அருள் நெறியைக்
காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று
ஓங்குதல் என்று வந்து உறுமோ
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம்
மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது
உரைப்பது என் அடிக்கடி உனக்கே