Aatramai Vallalar songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

2. கற்ற மேலவர்-தம் உறவினைக் கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

3. கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கல்_மன குரங்கு_அனேன் கடையேன்
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

4. நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண் போது போக்குறுவேன்
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

5. செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்பச் செல்லினால் அரிப்புண்ட சிறியேன்
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன்
படி முடிவு அழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடி முடிந்திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

6. அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அறக் கடையவரினும் கடையேன்
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கு எனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

7. வாட்டமே உடையார்-தங்களைக் காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத் தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

8. கலைத் தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன்
விலைத் தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத் தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத் தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

9. பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன்
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன்
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு எனத் திரிந்து உழல்கின்றேன்
குணம் இலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

10. கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.