Achsop Pattu

திருவருட்பா

ஆறாம் திருமுறை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
பெருங்கருணைக் கடலை வேதத்
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
தெள்ளமுதத் தெளிவை வானில்
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

2. மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
இதயத்தே விளங்கு கின்ற
துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
ஒன்றான தெய்வந் தன்னை
அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

3. எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
சிவகதியைச் சிவபோ கத்தைத்
துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
துணிந்தளித்த துணையை என்றன்
அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

4. பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
பெருங்களிப்புச் செய்தான் தன்னை
முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
கொடுத்தெனக்கு முன்னின் றானை
அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

5. பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
பெரும்பொருளைப் புனிதந் தன்னை
என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
பெருங்கருணை இயற்கை தன்னை
இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

6. இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
உடையானை எல்லாம் வல்ல
சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
விரித்தடக்கும் தெய்வந் தன்னை
எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
பெருந்தாயை என்னை ஈன்ற
அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

7. எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
இடங்கொண்ட இறைவன் தன்னை
இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
தந்தானை எல்லாம் வல்ல
செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
தெள்ளமுதத் திரளை என்றன்
அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

8. என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
தான்கொண்டிங் கென்பால் அன்பால்
தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
களித்தளித்த தலைவன் தன்னை
முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
இருந்தமுழு முதல்வன் தன்னை
அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

9. எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
தருகின்றோம் இன்னே என்றென்
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
திருக்கின்ற கருத்தன் தன்னைப்
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
மெய்இன்பப் பொருளை என்றன்
அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

10. சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

திருச்சிற்றம்பலம்

1. கருத்தனை என் கண்மணியைக் கண்_நுதலைப்
பெரும் கருணை_கடலை வேதத்
திருத்தனை என் சிவ பதியைத் தீம் கனியைத்
தெள் அமுதத் தெளிவை வானில்
ஒருத்தனை என் உயிர்த் துணையை உயிர்க்குயிரை
உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி
அருத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

2. மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என்
இதயத்தே விளங்குகின்ற
துய்யனை மெய்த் துணைவனை வான் துரிய நிலைத்
தலைவனைச் சிற்சுகம் தந்தானைச்
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை
ஒன்றான தெய்வம்-தன்னை
அய்யனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

3. எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
விளங்க விளக்கிடுவான்-தன்னைச்
செப்ப அரிய பெரிய ஒரு சிவ_பதியைச்
சிவகதியைச் சிவ_போகத்தைத்
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம்
துணிந்து அளித்த துணையை என்றன்
அப்பனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

4. பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த
பெருந்தகை எம் பெருமான்-தன்னைச்
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்குப்
பெரும் களிப்புச் செய்தான்-தன்னை
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு
கொடுத்து எனக்கு முன்_நின்றானை
அறிவனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

5. பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியைப் பூரணமாம்
பெரும் பொருளைப் புனிதம்-தன்னை
என் பிழையைப் பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட
பெரும் கருணை இயற்கை-தன்னை
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும்
பெரு வாழ்வை என் உள் ஓங்கும்
அன்பினைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

6. இத்தனை என்றிட முடியாச் சத்தி எலாம்
உடையானை எல்லாம்_வல்ல
சித்தனை என் சிவ பதியைத் தெய்வம் எலாம்
விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனிப்
பெரும் தாயை என்னை ஈன்ற
அத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

7. எம்மையும் என்றனை பிரியாது என் உளமே
இடம்கொண்ட இறைவன்-தன்னை
இம்மையில் என்றனக்கு அழியாத் திரு_வடிவம்
தந்தானை எல்லாம்_வல்ல
செம்மை தரு சித்தனை என் சிவ பதியைத்
தெள் அமுதத் திரளை என்றன்
அம்மையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

8. என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்
தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால்
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும்
களித்து அளித்த தலைவன்-தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழுத் துணையாய்
இருந்த முழு_முதல்வன்-தன்னை
அன்னையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

9. எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம்
எலாம் தருகின்றோம் இன்னே என்று என்
கண் நிரம்ப ஒளி காட்டிக் கருத்தில் அமர்ந்து
இருக்கின்ற கருத்தன்-தன்னைப்
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை
மெய் இன்பப் பொருளை என்றன்
அண்ணலைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.

10. சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம்
விடுவித்து என்றன்னை ஞான
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க
நிலை-தனிலே நிறுத்தினானைப்
பாதியை ஒன்று_ஆனவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதி அனாதி
ஆதியைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ.