திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ
அடியனேன் ஆர்_உயிர் என்கோ
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ
என் இரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ
நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ
இம்பர் இப் பிறப்பே மெய்ப் பிறப்பு ஆக்கி
என்னை ஆண்டு அருளிய நினையே.
2. அம்மையே என்கோ அப்பனே என்கோ
அருள்_பெரும்_சோதியே என்கோ
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ
திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ
தமியனேன் தனித் துணை என்கோ
இம்மையே அழியாத் திரு உரு அளித்து இங்கு
என்னை ஆண்டு அருளிய நினையே.
3. எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ
என் உயிர்க்கு இன்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ
சோதியுள் சோதியே என்கோ
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ
தனிப் பெரும் தலைவனே என்கோ
இப் பிறப்பு-அதிலே மெய்ப் பயன் அளித்து இங்கு
என்னை ஆண்டு அருளிய நினையே.
4. அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ
அம்பலத்து எம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ
நீடும் என் நேயனே என்கோ
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ
பெரியரில் பெரியனே என்கோ
இச் சகத்து அழியாப் பெரு நலம் அளித்து இங்கு
என்னை ஆண்டு அருளிய நினையே.
5. அத்தம் நேர் கிடைத்த சுவைக் கனி என்கோ
அன்பிலே நிறை அமுது என்கோ
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ
திரு_சிற்றம்பலச் சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ
மன்னும் என் வாழ் முதல் என்கோ
இத் தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
என்னை ஆண்டு அருளிய நினையே.
6. மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ
மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ
பதச் சுவை அனுபவம் என்கோ
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ
திரு_சிற்றம்பலத் தந்தை என்கோ
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு
என்னை ஆண்டு அருளிய நினையே.
7. அன்பிலே பழுத்த தனிப் பழம் என்கோ
அறிவிலே அறிவறிவு என்கோ
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ
என் உயிர்த் துணைப் பதி என்கோ
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ
மன்னும் அம்பலத்து அரசு என்கோ
என் புரி அழியாப் பொன் புரி ஆக்கி
என்னை ஆண்டு அருளிய நினையே.
8. தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ
சர்க்கரைக்கட்டியே என்கோ
அடைவு உறு வயிரக் கட்டியே என்கோ
அம்பலத்து ஆணி_பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெரு மலை என்கோ
உள் ஒளிக்குள் ஒளி என்கோ
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே
என்னை ஆண்டு அருளிய நினையே.
9. மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ
மன்னும் ஆகமப் பொருள் என்கோ
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ
குணப் பெரும் குன்றமே என்கோ
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ
பெரிய அம்பலத்து அரசு என்கோ
இறை முடிப் பொருள் என் உளம் பெற அளித்து இங்கு
என்னை ஆண்டு அருளிய நினையே.
10. என் உளம் பிரியாப் பேர்_ஒளி என்கோ
என் உயிர்த் தந்தையே என்கோ
என் உயிர்த் தாயே இன்பமே என்கோ
என் உயிர்த் தலைவனே என்கோ
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ
என்னுடை நண்பனே என்கோ
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ
என்னை ஆண்டு அருளிய நினையே.