திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

17. அபராத விண்ணப்பம்
அபராத விண்ணப்பம்
0:00
0:00
🔊

திருவொற்றியூர்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.

2. உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.

3. கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.

4. வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
வேடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
நீடயில் படைசேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.

5. நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.

6. அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.

7. நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.

8. சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.

9. துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.

10. கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
சுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே
தட்டிலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்தருள் தருந்தயா நிதியே

திருச்சிற்றம்பலம்

1. தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத்து எண்ணி நீ கோபம்
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே.

2. உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே.

3. கழல் கொள் உன் அருமைத் திரு_அடி_மலரைக் கருதிடாப் பிழை-தனைக் குறித்தே
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியாத்
தழல் நிறப் பவள_குன்றமே ஒற்றித் தனி நகர் அமர்ந்து அருள் தகையே.

4. வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனைக் குறித்தே
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.

5. நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணியப் புனித வாரிதியே.

6. அஞ்செழுத்து ஓதி உய்ந்திடாப் பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்து இருத்திய அருள்_கடலே
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே

7. நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனைக் குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.

8. சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனைக் குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர்ப் பொருளே.

9. துரும்பினேன் பிழையைத் திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே

10. கட்டினேன் பாபக் கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
சுட்டு இலாப் பொருளே சுகப் பெரும் கடலே தூய்த் திருவொற்றியூர்த் துணையே
தட்டு இலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்து அருள்தரும் தயாநிதியே.