திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

11. அபராதத் தாற்றாமை
அபராதத் தாற்றாமை
0:00
0:00
🔊

திருவொற்றியூர்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மைஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனேஎம் பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே.

2. தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
தோகையர் மயக்கிடை அழுந்தி
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
மாமணிக் குன்றமே மருந்தே
ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
யூர்வரும் என்னுடை உயிரே.

3. கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
தெய்வமே தெய்வநா யகமே
உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
ஒற்றியூர் வாழும்என் உவப்பே.

4. இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
கண்ணுதல் உடையசெங் கனியே
தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
திருவொற்றி யூர்வரும் தேவே.

5. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
மலரடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
விடையில்வந் தருள்விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
காட்சியே ஒற்றியங் கரும்பே.

6. முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
மூடனேன் முழுப்புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடையுடைக் கனியே
காலமும் கடந்தவர் கருத்தே.

7. கருதென அடியார் காட்டியும் தேறாக்
கன்மனக் குரங்கனேன் உதவா
எருதென நின்றேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே
வன்பவம் தீர்த்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
ஒற்றியூர் மேவும்என் உறவே.

8. வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
வஞ்சனேன் நின்னடி யவர்பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
கோலநெஞ் சொளிர் குணக் குன்றே
உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.

9. தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
இடையிடர்ப் பசியசெம் பொன்னே
செவ்வண மணியே திகழ்குணக் கடலே
திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.

10. வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
புனிதமே புதுமணப் பூவே
பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
பாதுகாத் தளிப்பதுன் பரமே.

திருச்சிற்றம்பலம்

1. துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம் பசுபதியே
அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே.

2. தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன்
தோகையர் மயக்கிடை அழுந்தி
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள
மா மணி_குன்றமே மருந்தே
ஓங்கி வான் அளவும் பொழில் செறி
ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே.

3. கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய
கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
தெய்வமே தெய்வநாயகமே
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே
ஒற்றியூர் வாழும் என் உவப்பே.

4. இல்லை என்பதனுக்கு அஞ்சிடேன் நாய்க்கும்
இணை_இலேன் இழிவினேன் துயர்க்கு ஓர்
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே
கண் நுதல் உடைய செங்கனியே
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே
திருவொற்றியூர் வரும் தேவே.

5. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன்
மலர்_அடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
விடையில் வந்து அருள் விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே
காட்சியே ஒற்றி அம் கரும்பே.

6. முட்டியே மடவார் முலை-தலை உழக்கும்
மூடனேன் முழு புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே
ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடை உடைக் கனியே
காலமும் கடந்தவர் கருத்தே.

7. கருது என அடியார் காட்டியும் தேறாக்
கல்_மன குரங்கு_அனேன் உதவா
எருது என நின்றேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே
வன் பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
ஒற்றியூர் மேவும் என் உறவே.

8. வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை
வஞ்சனேன் நின் அடியவர்-பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர்
கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே
உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்
அகத்து அமர்ந்து அருள் ஒன்றே.

9. தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன்
தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
எவ்வணப் பொருப்பே என் இரு கண்ணே
இடையிடாப் பசிய செம்பொன்னே
செவ் வண மணியே திகழ் குண_கடலே
திருவொற்றியூர்ச் செழும் தேனே.

10. வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன்
வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே
ஒழியாப் புனிதமே புது மணப் பூவே
பாதமே சரணம் சரணம் என்றன்னைப்
பாதுகாத்து அளிப்பது உன் பரமே.