Apayath Thiran Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. ஆடக மணிப் பொன்_குன்றமே என்னை
ஆண்டுகொண்டு அருளிய பொருளே
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின்
மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
தவிர்த்து அருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை_நாதனே உன்னை
நம்பினேன் கைவிடேல் எனையே.

2. வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே
வயங்கு சிற்சோதியே அடியேன்
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த
இன்பமே என் பெரும் பொருளே
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த
கடவுளே கனக மன்றகத்தே
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே
நம்பினேன் கைவிடேல் எனையே.

3. புல் அவா மனத்தேன் என்னினும் சமயம்
புகுதவா பொய் நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிது ஓர்
சொப்பனத்தாயினும் நினையேன்
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன்
கனக மா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

4. புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே
கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலம் சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

5. புண்ணிலே புகுந்த கோல் எனத் துயரம்
புகுந்து எனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும்
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

6. ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான் பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப் பெரும் தெய்வமும் தவமும்
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே.

7. வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என்
வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணைத்
தேகமும் உருவும் மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்
இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பது உன் கடன் நான்
நம்பினேன் கைவிடேல் எனையே.

8. வம்பனேன் பிறர் போல் வையமும் வானும்
மற்றவும் மதித்திலேன் மதம் சார்
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா
உலகமும் வாழ்க என்று இருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
செய வல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

9. ஆய கால் இருந்தும் நடந்திட வலி
இல்லாமையால் அழுங்குவார் என உன்
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர்
விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன்
தீய கான் விலங்கைத் தூய மானிடம் செய்
சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நாயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

10. அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி
ஆடிய சிறுபருவத்தே
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட
குணப் பெரும் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய்த் தவர்-தம்
சிந்தையில் இனிக்கின்ற தேனே
நல் தகவு உடைய நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

11. படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய
பாவியில் பாவியேன் தீமைக்கு
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன்
என்னினும் துணை எந்தவிதத்தும்
திடம் புரி நின் பொன் அடித் துணை எனவே
சிந்தனை செய்திருக்கின்றேன்
நடம் புரி கருணை_நாயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

12. படித்தனன் உலகப் படிப்பு எலாம் மெய் நூல்
படித்தவர்-தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
நோக்கினேன் பொய்யர்-தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
பெரியரில் பெரியர் போல் பேசி
நடித்தனன் எனினும் நின் அடித் துணையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

13. பஞ்சு நேர் உலகப் பாட்டிலே மெலிந்த
பாவியேன் சாவியே போன
புஞ்செயே_அனையேன் புழுத் தலைப் புலையேன்
பொய் எலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

14. கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில்
கடியனேன் காமமே கலந்து
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய
வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

15. ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில்
ஊர்-தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன்
வஞ்சமே பொருள் என மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

16. காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன்
கைவழக்கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன்
உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

17. துனித்த வெம் மடவார் பகல் வந்த போது
துறவியின் கடுகடுத்திருந்தேன்
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடித்
தழுவினேன் தட முலை விழைந்தேன்
இனித்த சொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன்
நனித் தவறு_உடையேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

18. தார்த் தட முலையார் நான் பலரொடும் சார்
தலத்திலே வந்த போது அவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
பாதகப் பூனை போல் இருந்தேன்
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து
பேசினேன் வஞ்சரில் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

19. பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன்
பேய் எனப் பிடித்தனன் மடவார்க்கு
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமைத் தொட்டு
உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

20. வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல்
வாதி போல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை
அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை
எனை விடக் கொடியருக்கு ஈந்தேன்
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

21. கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே
காசிலே ஆசை_இல்லவன் போல்
பட்டமே காட்டிப் பணம் பறித்து உழன்றேன்
பகல் எலாம் தவசி போல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே
இழுதையில் தூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

22. காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
காட்டிடாது அம்பு எலாம் அடங்கும்
தூணியே எனச் சார்ந்திருந்தனன் சோற்றுச்
சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும்
ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

23. அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று
இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன்
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன்
கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன்
நடுத் தயவு அறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

24. எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும்
எண்ணமே பெரிது உளேன் புன்செய்க்
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து
காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன்
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போலச்
சுவை பெறச் சுவைத்த நாக்கு உடையேன்
நளிர் எனச் சுழன்றேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

25. கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன்
கோடு உறு குரங்கினில் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம்
அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன்
மலைவுறு சமய வலை அகப்பட்டே
மயங்கிய மதியினேன் நல்லோர்
நலை அல எனவே திரிந்தனன் எனினும்
நம்பினேன் கைவிடேல் எனையே.

26. ஈ எனப் பறந்தேன் எறும்பு என உழன்றேன்
எட்டியே என மிகத் தழைத்தேன்
பேய் எனச் சுழன்றேன் பித்தனே என வாய்ப்
பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன்
காய் எனக் காய்த்தேன் கடை என நடந்தேன்
கல் எனக் கிடந்தனன் குரைக்கும்
நாய் எனத் திரிந்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

27. ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த
ஊத்தையேன் நாத் தழும்புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற
பகடு எனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

28. கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன்
கள்ளனேன் கள் உண்ட கடியேன்
சுவை எலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
துட்டனேன் தீது எலாம் துணிந்தேன்
இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ
இந்த நாள் இறைவ நின் அருளால்
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
நம்பினேன் கைவிடேல் எனையே.