Arul Vilakka Maalai

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.

2. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்­ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

3. இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.

4. ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.

5. மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.

6. கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

7. கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.

8. கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

9. அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.

10. நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.

11. நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.

12. தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.

13. உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

14. நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.

15. கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

16. கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

17. தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.

18. மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.

19. கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.

20. உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.

21. நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

22. எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

23. சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

24. அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

25. அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

26. பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

27. பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.

28. ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

29. வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

30. பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

31. மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

32. சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

33. சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

34. நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

35. மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

36. விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.

37. தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

38. வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.

39. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

40. காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

41. திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

42. கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.

43. தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

44. தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

45. ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

46. தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

47. ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

48. இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

49. நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

50. நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

51. நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

52. மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.

53. இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.

54. கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

55. எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.

56. சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

57. சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

58. நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

59. திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

60. என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

61. மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

62. நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

63. விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

64. கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

65. மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

66. என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.

67. தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.

68. பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

69. வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

70. கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

71. உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

72. வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

73. கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

74. தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

75. அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

76. வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

77. ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

78. பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

79. மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.

80. அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.

81. சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

82. பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.

83. உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

84. கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

85. நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

86. எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

87. இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

88. தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

89. நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

90. தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

91. ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

92. காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

93. சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.

94. ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.

95. கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

96. அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

97. எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

98. இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

99. குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

100. தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

திருச்சிற்றம்பலம்

1. அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே.

2. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

3. இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே
ஏங்கிய போது என்றன்னைத் தாங்கிய நல் துணையே
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே
இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே
தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே.

4. ஒசித்த கொடி_அனையேற்குக் கிடைத்த பெரும் பற்றே
உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்றுத் திரளே
பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே
நான் புணர நான் ஆகி நண்ணிய மெய்ச் சிவமே
கசித்த மனத்து அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே
களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே.

5. மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து
வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே
சின_முகத்தார்-தமைக் கண்டு திகைத்த பொழுது அவரைச்
சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே
அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம் எனப் பேர்_அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே
என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே.

6. கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே
காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி
என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே
துங்கமுறத் திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே
சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

7. கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து
கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே
மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகித்
திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய்ச் சத்தே
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே
மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே.

8. கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில்
கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே
மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே
துதிக்கும் அன்பர் தொழப் பொதுவில் நடம் புரியும் அரசே
சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

9. அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும்
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும்
காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண் தகு பேர்_அருள் சோதிப் பெருவெளிக்கு நடுவே
விளங்கி ஒரு பெரும் கருணைக் கொடி நாட்டி அருளாம்
தண் தகும் ஓர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும்
தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே.

10. நல்லார் சொல் யோகாந்தப் பதிகள் பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள் பல கோடி
வல்லார் சொல் கலாந்த நிலைப் பதிகள் பல கோடி
வழுத்தும் ஒரு நாதாந்தப் பதிகள் பல கோடி
இல் ஆர்ந்த வேதாந்தப் பதிகள் பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள் பல கோடி
எல்லாம் பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும்
என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே.

11. நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா
ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள்
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்கச்
சூட்டிய பொன் முடி இலங்கச் சமரச மெய்ஞ்ஞானச்
சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நிலையில் அமர்ந்தே
நீட்டிய பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும்
நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே.

12. தன் பெருமை தான் அறியாத் தன்மையனே எனது
தனித் தலைவா என் உயிர்க்குள் இனித்த தனிச் சுவையே
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன்
நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும்
அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே
யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே.

13. உண்ண உண்ணத் தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு
உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும்
தண்ணிய வண்ணம் பரவப் பொங்கி நிறைந்து ஆங்கே
ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி
இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுதத் திரளே
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே
புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

14. நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே
நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே
பன்னும் மறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா
கோவே என் கணவா என் குரவா என் குணவா
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும்
நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே.

15. கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே
கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே
மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில்
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே
புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

16. கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை
வைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே
தடுத்திட வல்லவர் இல்லாத் தனி முதல் பேர்_அரசே
தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

17. தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின்
தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே
அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே
அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே.

18. மலைவு அறியாப் பெரும் சோதி வச்சிர மா மலையே
மாணிக்க மணிப் பொருப்பே மரகதப் பேர் வரையே
விலை_அறியா உயர் ஆணிப் பெரு முத்துத் திரளே
விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலை அறியாக் குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள்
செங்கோல் நடத்துகின்ற தனிக் கோவே மெய் அறிவால்
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே
நின் அடிப் பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே.

19. கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்
கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகமே
பத்தர் உளே தித்திக்கப் பழுத்த தனிப் பழமே
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாம
வல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண் களிக்கப் பொது நடம் செய் நடத்து அரசே நினது
பெரும் புகழ்ச் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே.

20. உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே
உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே
பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனிப் பொருளே
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே
மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே
சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே.

21. நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில்
ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும்
ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும்
தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில்
வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

22. எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே
எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே
சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம் உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டு அறியாத் திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே
தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

23. சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித்
தனித்த திரு_அமுது அளித்த தனித் தலைமைப் பொருளே
ஆதி நடுக் கடை காட்டாது அண்ட பகிரண்டம்
ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனை-தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதி மயமாய் விளங்கித் தனிப் பொதுவில் நடிக்கும்
தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே

24. அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள் உருவாய்த் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல்
பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனிப் பதியே
பொடிக் கனகத் திரு_மேனித் திரு மணம் கற்பூரப்
பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே
அடிக் கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே
ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

25. அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத்
துறை யாவும் பிண்ட வகைத் துறை முழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

26. பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே
மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும்
தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே.

27. பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும்
படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான
உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே
சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே
முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே.

28. ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே
அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடுக் கீழ்
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய்க்
காணும் அவற்று அப்புறமும் கலந்த தனிக் கனலே
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திட நல் கதிர் பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம் பூதத் தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில்
விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

29. வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும்
வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடுப் பால்
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாகக் கலந்தே
ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும்
சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதிச் சுடரே
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில்
புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

30. பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும்
பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கித்
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே
தனி ஒளிச் செங்கோல் நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம்
விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும்
துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

31. மாமாயைப் பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே
வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே
அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தழைத்து விளங்கிடக் கதிர் செய் தனித்த பெரும் சுடரே
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும்
தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

32. சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும்
தூய ஒளி வடிவாகத் துலங்கும் ஒளி அளித்தே
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய்
நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்திய ஞானானந்தச் சித்தர் புகழ் பொதுவில்
தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

33. சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும்
தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடுக் கீழ் மற்று அனைத்தும்
உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும்
துலங்குகின்ற சுடர் பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும்
பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

34. நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும்
நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க
இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம்
குடி விளங்கக் கதிர் பரப்பிக் குலவு பெரும் சுடரே
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும்
பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

35. மன்னுகின்ற அபர சத்திப் பரம் ஆதி அவற்றுள்
வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள்
பரவி விளங்கிட விளங்கிப் பதிந்து அருளும் ஒளியே
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம்
சுகம் பெறவே கதிர் பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும் அன்பர் உளம் களிக்கத் திரு_சிற்றம்பலத்தே
ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

36. விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள்
விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கிக்
களங்கம்_இலாப் பர வெளியில் அந்தம் முதல் நடுத் தான்
காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும்
ஒளி விளங்கச் சுடர் பரப்பி ஓங்கு தனிச் சுடரே
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே
மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே.

37. தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே
சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே
பரம சுக மயம் ஆகிப் பரவிய பேர்_ஒளியே
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும்
மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே
புரிந்த தவப் பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே
புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

38. வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள்
மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம்
ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்கச்
சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனிச் சுடரே
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே
விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே.

39. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே.

40. காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும் மெய்யும் பரிசிக்கச் சுக பரிசத்ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தம் செய்குவதாய்த்
தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய்
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய்
மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே
ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

41. திரை இலதாய் அழிவு இலதாய்த் தோல் இலதாய்ச் சிறிதும்
சினைப்பு இலதாய்ப் பனிப்பு இலதாய்ச் செறிந்திடு கோது இலதாய்
விரை இலதாய்ப் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே
மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய்ப்
பரை வெளிக்கப் பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே
படைத்த எனது உளத்து இனிக்கக் கிடைத்த தனிப் பழமே
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணிப் பொதுவில்
ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

42. கார்ப்பு இலதாய்த் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய்ச் சிறிதும்
கசப்பு இலதாய்ப் புளிப்பு இலதாய்க் காய்ப்பு இலதாய்ப் பிறவில்
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே
தினைத்தனையும் நோய் தரும் அத் தீமை ஒன்றும் இலதாய்ப்
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம்
படைத்திட மெய்த் தவப் பயனால் கிடைத்த தனிப் பழமே
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய்
ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே.

43. தெற்றியிலே நான் பசித்துப் படுத்து இளைத்த தருணம்
திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே
ஒற்றியில் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி
உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடிப் பற்று ஆகப்
பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணிப் பொதுவில்
பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே.

44. தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும்
சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

45. ஓங்கிய ஓர் துணை இன்றிப் பாதி_இரவு-அதிலே
உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடைச் சிறியேன்
தூங்கி மிகப் புரண்டு விழத் தரையில் விழாது எனையே
தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த் துணையே
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே
சற்குருவே நான் செய் பெரும் தவப் பயனாம் பொருளே
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளிப் பொதுவில்
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

46. தனிச் சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனைத்
தன் வருத்தம் எனக் கொண்டு தரியாது அக் கணத்தே
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே
பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து அணைத்த குருவே
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர்க் கால்
இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில்
கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

47. ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர்
உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம்
பெரும் செயல் என்று எனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்
செய்து அருளிச் சிறுமை எலாம் தீர்த்த தனிச் சிவமே
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில்
காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

48. இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில் நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத் தேடி வந்தே
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியைப்
போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி
மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

49. நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி
நல் உணவு கொடுத்து என்னைச் செல்வம் உற வளர்த்தே
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே
ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞானத்
திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

50. நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி
நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும்
கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய்க் கிளை எனும் பேர்_ஒளியே
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க எனக் குறித்தே
பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனிப் பதியே
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த
ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

51. நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே
நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால்
தான் நிலைக்கவைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித்
தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே
எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே
தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

52. மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன்
அகத்தினைத் தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்தப்
பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே
ஏர்த் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே
என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே.

53. இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே
இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கித்
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றைத்
தடை ஆக்கி உலகு அறியத் தடை தீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே
இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும்
முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே.

54. கையாத தீம் கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே
போகாத புனலே உள் வேகாத_காலே
கொய்யாத நறு மலரே கோவாத மணியே
குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே
தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

55. எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே
அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே.

56. சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூ கா என்று எனைக் கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே
மா காதல் உடையார்கள் வழுத்த மணிப் பொதுவில்
மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

57. சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகித்
தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி
நீ ஆகி நான் ஆகி நின்ற தனிப் பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
சமரச சன்மார்க்க நிலைத் தலை நின்ற சிவமே
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில்
புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

58. நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி
நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகித்
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது எனத் தோற்றித்
தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி
வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்துத்
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில்
திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

59. திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனைத்
தெளிவித்து மணி மாடத் திரு_தவிசில் ஏற்றி
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து
நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே
வசை அறியாப் பெரு வாழ்வே மயல் அறியா அறிவே
வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருளப்
பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

60. என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே
இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே
தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெரும் சுடரே
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த
மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

61. மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும்
வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டிப்
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்துப்
பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே
ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனிப் பேர்_ஒளியே
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

62. நன்மை எலாம் தீமை எனக் குரைத்து ஓடித் திரியும்
நாய்க் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும்
புன்மை எலாம் பெருமை எனப் பொறுத்து அருளிப் புலையேன்
பொய் உரை மெய் உரையாகப் புரிந்து மகிழ்ந்து அருளித்
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும்
தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுறப் பொதுவில்
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

63. விழு_குலத்தார் அருவருக்கும் புழுக் குலத்தில் கடையேன்
மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே
மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனிப் பேர் ஒளியே
எழுக் குலத்தில் புரிந்த மனக் கழு_குலத்தார்-தமக்கே
எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும்
மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

64. கலைக்கொடி கண்டு அறியாத புலைக் குடியில் கடையேன்
கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி
மலைக்கு உயர் மாத் தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி
மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே
புலைக் கொடியார் ஒருசிறிதும் புலப்படக் கண்டு அறியாப்
பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே
விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

65. மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட
அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே
வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்கப் பொதுவில்
தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

66. என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே
எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தித்
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்துத்
தானும் உடன் இருந்து அருளிக் கலந்த பெருந்தகையே
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே
ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய்ச் சிவமே
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே
புண்ணியனே என் மொழிப் பூம் கண்ணியும் ஏற்று அருளே.

67. தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனி என் வசம் ஆகித் தாழ்ந்து ஏவல் இயற்ற
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற
முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும்
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி
இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே
இணை அடிப் பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே.

68. பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே
பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும்
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும்
மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்துப் போற்ற
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கிய அ வெளிகளைத் தன்னுள் அடக்கும் வெளியாய்க்
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே
கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

69. வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே
மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்து அருளிக் காத்து அளித்த துரையே
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே
அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

70. கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம்
வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே
நிலை விழைவார்-தமைக் காக்கும் நித்தியனே எல்லா
நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே
புலை அறியாப் பெரும் தவர்கள் போற்ற மணிப் பொதுவில்
புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

71. உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான்
நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பு அறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்
மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

72. வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும்
மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில்
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக
அன்றி அருள் செயல் ஒன்றும் செயத் துணியேல் என்றே
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான்
ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே
துன்பு அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில்
தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

73. கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும்
குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில் அதைப் பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம்
பயம் தீர்த்து விடுக எனப் பரிந்து உரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே
அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

74. தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி
நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில்
ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே
மயல் அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில்
மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

75. அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடிச்
செழித்திடுக வாழ்க எனச் செப்பிய சற்குருவே
பொருள்_உடைய பெரும் கருணைப் பூரண மெய்ச் சிவமே
போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணிப் பொதுவில்
வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

76. வெம் மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்று அடி குறித்துப் பாடும் வகை புரிந்த
பெருமானே நான் செய்த பெரும் தவ மெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே
அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

77. ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை
அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து
நீள் நவமாம் தத்துவப் பொன் மாடம் மிசை ஏற்றி
நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய
மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும்
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

78. பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே
பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதிய
வைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே
மீன் மறுத்துச் சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே
ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

79. மெய்ச் சுகமும் உயிர்ச் சுகமும் மிகும் கரணச் சுகமும்
விளங்கு பதச் சுகமும் அதன் மேல் வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக
எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது
அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும்
பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே.

80. அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன
வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவ மயமே
குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே.

81. சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம்
தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத் திசை அத் திசையாக இசைக்கும் அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது
அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே
தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

82. பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றைப்
புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரைச்
செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும்
ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறி வழங்கப் பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே
நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே.

83. உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும்
ஒரு கோடிப் பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும் பதியே
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே
நான் ஆகித் தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான்
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

84. கொள்ளை வினைக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம் உறும் அக் கலைகள் காட்டிய பல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில்
தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

85. நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ
விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே
காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற
வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே.

86. எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே
என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு எனக் கண்டு அறி நீ
திகைப்பு அடையேல் என்று எனக்குச் செப்பிய சற்குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடச் சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும்
ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

87. இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார்
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார்
மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே
திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

88. தோன்றிய வேதாகமத்தைச் சாலம் என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டு அறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும்
உலகு அறி வேதாகமத்தைப் பொய் எனக் கண்டு உணர்வாய்
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே
ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனிச் சிவமே
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

89. நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மதத் தலைவர் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற
சிறுபிள்ளைக் கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால்
தான் மிகக் கண்டு அறிக எனச் சாற்றிய சற்குருவே
சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

90. தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில்
இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும்
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது
என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான்
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே
சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

91. ஐயமுறேல் என் மகனே இப் பிறப்பில்-தானே
அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி
வையம் மிசைத் தனி இருத்தி மணி முடியும் சூட்டி
வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே
சுக மயமே எல்லாம் செய் வல்ல தனிப் பதியே
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

92. காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே
சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும்
மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

93. சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும்
சிவ பதமே ஆனந்தத் தேம் பாகின் பதமே
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே
துரிய பதமும் கடந்த பெரிய தனிப் பொருளே
நல் பதம் என் முடி சூட்டிக் கற்பது எலாம் கணத்தே
நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே
பல் பதத்துத் தலைவர் எலாம் போற்ற மணி மன்றில்
பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே.

94. ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த
அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம்
மிகப் பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை
தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன்
நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே.

95. கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே
கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும்
இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே
வயங்கு தனிப் பொருளே என் வாழ்வே என் மருந்தே
பிணக்கு அறியாப் பெரும் தவர்கள் சூழ மணி மன்றில்
பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

96. அடிச் சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி
அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து
கடிக் கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்பக்
கதிர் முடியும் சூட்டி எனைக் களித்து ஆண்ட பதியே
வடித்த மறை முடி வயங்கும் மா மணிப் பொன் சுடரே
மனம் வாக்குக் கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிடப் பொதுவில்
பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

97. எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர்
ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே
மெய்த் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து
வேண்டியவாறு அடி நாயேன் விளையாடப் புரிந்து
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும்
துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில்
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே
சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

98. இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திரு_அமுதும் அளித்த பெரும் பதியே
திருந்து மறை முடிப் பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர்
திகழ முடிந்து உள் கொண்ட சிவபோகப் பொருளே
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும்
பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

99. குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமாக்
கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து
மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தித்
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும்
தானும் ஒரு வடிவு ஆகித் தழைத்து ஓங்கப் புரிந்தே
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

100. தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனைத்
தான் வலிந்து ஆட்கொண்டு அருளித் தடை முழுதும் தவிர்த்தே
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி
வல்லப சத்திகள் எல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய்
நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி
அலர் தலைப் பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.