திருவருட்பா
இரண்டாம் திருமுறை
12. அருளியல் வினாவல்
திருமுல்லைவாயில்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. தேன்என இனிக்கும் திருவருட் கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான்என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ.
2. பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
புத்தமு தேமறைப் பொருளே
வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
தீங்கொடி யாத வினையனேன் எனினும்
செல்வநின் கோயில்வந் தடைந்தால்
ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
ஏன்எனா திருப்பதும் இயல்போ.
3. துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
சுந்தரா சுந்தரன் தூதா
மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினுநின் கோயிற்
கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
திருப்பதுன் திருவருட் கியல்போ.
4. கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
மங்கல்இல் லாத வண்மையே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
எங்குவந் தாய்நீ யார்என வேனும்
இயம்பிடா திருப்பதும் இயல்போ.
5. நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
நல்லவ னேதிருத் தில்லை
மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
திருப்பதுன் திருவருட் கியல்போ.
6. பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
பத்தர்கட் கருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
பெருமநின் அருள்பெற லாம்என்
றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.
7. முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
முக்கணா மூவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை வாரியே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
திருப்பதுன் திருவருட் கியல்போ.
8. நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
ஞானநா டகம்புரி நலமே
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
பொய்யல உலகறிந் ததுநீ
இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
இருப்பதுன் திருவருட் கியல்போ.
9. பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
பூங்கழற் கன்புபூண் டவன்காண்
எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.
10. பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
புண்ணியா கண்ணுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
உன்திரு அடித்துணை அறிய
என்னைஈன் றவனே முகமறி யார்போல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.
திருச்சிற்றம்பலம்
1. தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும்
உன் திரு_கோயில் வந்து அடைந்தால்
ஏன் எனக் கேளாது இருந்தனை ஐயா
ஈது நின் திரு_அருட்கு இயல்போ.
2. பூங்கொடி இடையைப் புணர்ந்த செந்தேனே
புத்தமுதே மறைப் பொருளே
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும்
செல்வ நின் கோயில் வந்து அடைந்தால்
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி
ஏன் எனாது இருப்பதும் இயல்போ.
3. துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண
சுந்தரா சுந்தரன் தூதா
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
4. கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே
கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
துங்க நின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால்
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும்
இயம்பிடாது இருப்பதும் இயல்போ.
5. நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும்
நல்லவனே திரு_தில்லை
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
துன்று நின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால்
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
6. பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
பத்தர்கட்கு அருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
பெரும நின் அருள் பெறலாம் என்று
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல்
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
7. முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே
முக்கணா மூவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன்
அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால்
என் இது சிவனே பகைவரைப் போல் பார்த்து
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
8. நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள்
ஞான_நாடகம் புரி நலமே
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
பொய்யல உலகு அறிந்தது நீ
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
9. பொதுவில்-நின்று அருளும் முதல் தனிப் பொருளே
புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது
பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண்
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல்
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.
10. பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியாப்
புண்ணியா கண் நுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில்
வாழ் மாசிலாமணியே
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன்
உன் திரு_அடித் துணை அறிய
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல்
இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.