திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

19. அருள்விடை வேட்கை
அருள்விடை வேட்கை
0:00
0:00
🔊

திருவொற்றியூர்

கலி விருத்தம்

1. போகம் கொண்ட புணர்முலை மாதொரு
பாகம் கொண்ட படம்பக்க நாதரே
மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.

2. தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
பவள மேனிப் படம்பக்க நாதரே
கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.

3. சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
பால மேவும் படம்பக்க நாதரே
ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.

4. உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
படைகொள் சூலப் படம்பக்க நாதரே
கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.

5. நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
பறைய நின்றப டம்பக்க நாதரே
உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.

6. வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.

7. நாட நல்இசை நல்கிய மூவர்தம்
பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.

8. சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
பலவு மாகும்ப டம்பக்க நாதரே
நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.

9. அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
படிவ மாகும்ப டம்பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.

10. மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.

திருச்சிற்றம்பலம்

1. போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு
பாகம் கொண்ட படம்பக்கநாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின்
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ.

2. தவள நீற்று மெய்ச் சாந்த வினோதரே
பவள மேனிப் படம்பக்கநாதரே
கவள வீற்றுக் கரி உரி போர்த்த நீர்
இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ.

3. சீலம் மேவித் திகழ் அனல் கண் ஒன்று
பாலம் மேவும் படம்பக்கநாதரே
ஞாலம் மேவும் நவையை அகற்ற முன்
ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே.

4. உடை கொள் கோவணத்து உற்ற அழகரே
படை கொள் சூலப் படம்பக்கநாதரே
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர்
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ.

5. நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம்
பறைய நின்ற படம்பக்கநாதரே
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர்
குறை இலா ஒற்றிக் கோயில்-கண் உள்ளிரோ.

6. வணம் கொள் நாக மணித் தலை ஐந்து உடைப்
பணம் கொள் செல்வப் படம்பக்கநாதரே
கணம் கொள் காமனைக் காய்ந்து உயிர் ஈந்த நீர்
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே.

7. நாட நல் இசை நல்கிய மூவர்-தம்
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர்
ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ.

8. சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல்
பலவும் ஆகும் படம்பக்கநாதரே
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர்
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ.

9. அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர்
படிவம் ஆகும் படம்பக்கநாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர்
மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ.

10. மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்வியப்
பதி கொள் செல்வப் படம்பக்கநாதரே
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர்
துதி கொள்வீர் என் துயரைத் துரத்துமே.