Arutperunjothi Attagam Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து
அருள் பெரும் தலத்து மேல் நிலையில்
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில்
அருள் பெரும் திருவிலே அமர்ந்த
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே
அருள் பெரும் சித்தி என் அமுதே
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே
அருள்_பெரும்_சோதி என் அரசே.

2. குலவு பேர் அண்டப் பகுதி ஓர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும்
மெய் அறிவானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

3. கண் முதல் பொறியால் மனம் முதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால்
விண் முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவது அரிது என உணர்ந்தோர்
அண் முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

4. நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே
நண்ணியும் கண்ணுறாது அந்தோ
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கித்
திரும்பின எனில் அதன் இயலை
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும்
இசைத்திடுவேம் என நாவை
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

5. சுத்த வேதாந்த மவுனமோ அலது
சுத்த சித்தாந்த ராசியமோ
நித்த நாதாந்த நிலை அனுபவமோ
நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ
புத்தமுது அனைய சமரசத்ததுவோ
பொருள் இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

6. ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ
உரைப்பது எற்றோ என உணர்ந்தோர்
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

7. தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவாதீத மேல் நிலையில்
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல்
சிவ நிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோயினம் என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும்
அருள்_பெரும்_சோதி என் அரசே.

8. எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இது அது என உரைப்ப அரிதாய்த்
தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத்
தந்து எனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய்ப்
புத்தமுது அருத்தி என் உளத்தே
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த
அருள்_பெரும்_சோதி என் அரசே.