Arutperunjothi En Andavar Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. காரண காரியக் கல்விகள் எல்லாம்
கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி
நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கிப்
பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப்
புத்தமுதாம் அருள் போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

2. தேகம் எப்போதும் சிதையாத வண்ணம்
செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கிப்
போதாந்த_நாட்டைப் புரக்க மேல் ஏற்றி
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும்
இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

3. தான் அந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத் தந்து எனக்கு உள்ளே
தேன் நந்தத் தெள் அமுது ஊற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம் சிவமயம் ஆக்கி
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா
வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்த வேதாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

4. சிற்சபை இன்பத் திரு_நடம் காட்டித்
தெள் அமுது ஊட்டி என் சிந்தையைத் தேற்றிப்
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய்
பூரண சித்தி மெய்ப் போகமும் தந்தே
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில்
சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

5. தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கிச்
சாகா_வரத்தையும் தந்து எனைத் தேற்றி
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா
உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றிச்
சித்தி எலாம் செயச்செய்வித்துச் சத்தும்
சித்தும் வெளிப்படச் சுத்த நாதாந்த
அத் திரு_வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

6. இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா
என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால்
தந்து எனை யாவரும் வந்தனை செயவே
நித்தியன் ஆக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க
நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த
அத் தனி வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

7. மருந்து இது மணி இது மந்திரம் இது செய்
வகை இது துறை இது வழி இது எனவே
இருந்து எனுள் அறிவித்துத் தெள் அமுது அளித்தே
என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கிப்
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்திப்
புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

8. பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டிப்
பாச விமோசனப் பக்குவன் ஆக்கி
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே
நினைத்தனநினைத்தன நேருறப் புரிந்து
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற
சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

9. இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழி துறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே
சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

10. இருள் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இரு வாய்ப்புப் புன்செயில் எரு ஆக்கிப் போட்டு
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கு எலாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி
சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே
அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.