திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
2. கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
3. நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
4. சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
5. களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
6. திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
7. ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ
கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
8. தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
9. தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
10. ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும்
திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ
உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான
உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப்
பொங்கி அகம் வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே.
2. கரணம் எலாம் கரைந்த தனிக் கரை காண்பது உளதோ
கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ
அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல்
வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான்
தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே.
3. நாதாந்தத் திரு_வீதி நடந்து கடப்பேனோ
ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ
போதாந்தத் திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ
புதுமை அறச் சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும்
பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே.
4. சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான்
சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ
பதம் பெறத் தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும்
பசு நெய்யும் கலந்தது எனப் பாடி மகிழ்வேனோ
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத
நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ
மதம் பரவு மலைச் செருக்கில் சிறந்த சிறியேன் நான்
வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே.
5. களக்கம் அறப் பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்தது ஒரு காய்-தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ
வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ
கொளக் கருதும் மல மாயைக் குரங்கு கவர்ந்திடுமோ
குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும்
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ
ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே.
6. திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம்
சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள்
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர்
காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம்
விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ
தருப் பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ
தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே.
7. ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே
அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான்
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ
கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ
ஊன் அந்தம் அறக் கொளும் போது இனிக்க ரசம் தருமோ
உணக் கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ
நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே.
8. தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன்
சந்நிதி போய் வர விடுத்த தனிக் கரணப் பூவை
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ
கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம்
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ
பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே.
9. தீட்டு மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்தச்
செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன்
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ
கால் இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ
ஈட்டு திரு_அடிச் சமுகம் காணவும் நேர்ந்திடுமோ
எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே.
10. ஞான மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே
நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன்
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ
உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ
ஈனம் உறும் அகங்காரப் புலி குறுக்கே வருமோ
இச்சை எனும் இராக்கதப் பேய் எனைப் பிடித்துக்கொளுமோ
ஆன மலத் தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ
ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே