திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே
சீலம் ஆர் பூசைக் கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே
ஞாலம் மேலவர்க்குக் காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே
காலை ஆதிய முப்போதினும் சோற்றுக் கடன் முடித்து இருந்தனன் எந்தாய்.
2. சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய்.
3. விருப்பு_இலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளைக் கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய்.
4. உறியிலே தயிரைத் திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்த பேர்_ஆசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
5. கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண்
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர் எனப் புகல்வேன் அய்யகோ அடிச் சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய்.
6. பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திடத் துணியேன்
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய்.
7. உடம்பு ஒரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால்
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன்
திடம் பெறும் மற்றைச் சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய்.
8. மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன்
இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன்
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய்.
9. தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழி எலாம் நிரம்பக் கொட்டினேன் குணம் இலாக் கொடியேன்
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன்
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய்.
10. வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில் எனத் துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப் புலைக் கூட்டைப் பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய்.
11. பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப் பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப் பிடி இருப்புத் துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய்.
12. அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே
தடிக் கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்துத் தவம் புரிந்தான் என நடித்தேன்
பொடிக் கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய்.
13. உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே
தொண்டு_உறாதவர் கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.