திருவருட்பா
இரண்டாம் திருமுறை
09. அவலத் தழுங்கல்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
2. கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
3. கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
செய்த வத்திரு மடந்தையர் நடனம்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
4. அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
அன்னை என்பர்கள் அழவலி இல்லாக்
கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
குற்றம் அன்றது மற்றவள் செயலே
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்
செழுது மாதவி மலர்திசை மணக்கத்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
5. உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
6. விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
உள்ளம் எப்படி அப்படி அறியேன்
திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
7. நிலையி லாஉல கியல்படும் மனத்தை
நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
அற்ப னேன்திரு அருளடை வேனே
சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
8. காயம் என்பதா காயம்என் றறியேன்
கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
தூய நின்அடி யவருடன் கூடித்
தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
9. புன்னு னிப்படும் துளியினும் சிறிய
போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
10. அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
திருச்சிற்றம்பலம்
1. ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய்
உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன்
வாது இயம்புறும் வஞ்சகருடனே
வாய் இழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன்
அன்பு இலாத என் வன்பினை நினைக்கில்
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
2. கல் இகந்தவன் நெஞ்சகக் கொடியேன்
கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும்
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி
வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில்
இல் இகந்த என் மீது எனக்கே-தான்
இகலும் கோபமும் இருக்கின்றதானால்
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
3. கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே
காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன்
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன்
செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே
எய் தவத் திரு_அருள் எனக்கு இரங்கி
ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே
செய் தவத் திரு_மடந்தையர் நடனம்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
4. அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள்
அன்னை என்பர்கள் அழ வலி இல்லாக்
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள்
குற்றம் அன்று அது மற்று அவள் செயலே
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே
துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம்
செழுது மாதவி மலர் திசை மணக்கத்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
5. உள்ளியோ என அலறி நின்று ஏத்தி
உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும்
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன்
மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளியோ எனப் பொன் மகிழ் சிறக்க
விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய்
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்னத்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
6. விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி
வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன்
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார்
மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன்
ஒருப்படாத இ என்னளவு இனி உன்
உள்ளம் எப்படி அப்படி அறியேன்
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
7. நிலையிலா உலகியல் படும் மனத்தை
நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன்
விலையிலா மணியே உனை வாழ்த்தி
வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன்
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன்
அற்பனேன் திரு_அருள் அடைவேனே
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
8. காயம் என்பது ஆகாயம் என்று அறியேன்
கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன்
சேய நல் நெறி அணித்து எனக் காட்டும்
தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன்
தூய நின் அடியவருடன் கூடித் த
ொழும்புசெய்வதே சுகம் எனத் துணியேன்
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
9. புல் நுனிப்படும் துளியினும் சிறிய
போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன்
என் இனிப் படும் வண்ணம் அஃது அறியேன்
என் செய்கேன் எனை என் செயப் புகுகேன்
மின்னினில் பொலி வேணி அம் பெருமான்
வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கித்
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.
10. அடியனேன்_அலன் என்னினும் அடியேன்
ஆக நின்றனன் அம்மை இம்மையினும்
கடியனேன் பிழை யாவையும் பொறுக்கக்
கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே
புன்னை அம் சடைப் புங்கவர் ஏறே
செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.