திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

20. எழுத்தறியும் பெருமான் மாலை
எழுத்தறியும் பெருமான் மாலை
0:00
0:00
🔊

திருவொற்றியூர்

கொச்சகக் கலிப்பா

திருச்சிற்றம்பலம்

1. சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

2. மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.

3. நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

4. மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

5. நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.

6. தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

7. மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

8. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

9. புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

10. சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

11. மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்தழும்என் கண்­ர் துடைத்தருள
என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.

12. மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.

13. மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.

14. பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

15. பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.

16. வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.

17. பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.

18. கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.

19. பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.

20. மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

21. ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.

22. நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

23. போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.

24. ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

25. மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

26. முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.

27. பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

28. வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

29. பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.

30. ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

31. நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

திருச்சிற்றம்பலம்

1. சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே
நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

2. மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள்
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை
முத்து_அனையாய் உன்றன் முளரித் தாட்கு ஆளாக்க
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே.

3. நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின்
செம் நெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

4. மைப் படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ
கைப் படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

5. நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இ உலகில்
சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே.

6. தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும்
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன்
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

7. மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே
கூறாத துன்பக் கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன்
ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

8. உள் நாடும் வல்_வினையால் ஓயாப் பிணி உழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

9. புன் செய்கை மாறாப் புலைய மட மங்கையர்-தம்
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

10. சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம்
கொங்கு உடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

11. மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே
வென்றி மழுக் கை உடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே.

12. மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர்
தென் அளவும் வேணிச் சிவமே என ஒருகால்
சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே.

13. மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையாப்
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல்
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே.

14. பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளைப் புண்ணியர்கள்
தாம் மாந்தி நின் அடிக் கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான்
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

15. பன்ன அரும் இப் பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன்
துன்னிய நின் பொன்_அடியைச் சூழாதேன் ஆயிடினும்
புல் நிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்பு உனக்கே
என் அருமைத் தாய் நீ எழுத்தறியும்_பெருமானே.

16. வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை எனத்
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம்
பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடிப் புகழ் போல்
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே.

17. பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன்
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே.

18. கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில்
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன்
ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர்
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே.

19. பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியைப் போற்றாத
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே.

20. மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்து அடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

21. ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள்
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல்
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

22. நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலாப் பொய்_அடியேன்
ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல்
தூக்கம் இலா ஆனந்தத் தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர்
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

23. போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆ
ளாகின்ற மேலோர் அடி வழுத்தா நாயேற்குப்
பாகின் தனிச் சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே.

24. ஊழை அகற்ற உளவு அறியாப் பொய்யன் இவன்
பீழை மனம் நம்மைப் பெறாது அ மனம் கொடிய
தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன்
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

25. மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம்
கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

26. முள் அளவு நெஞ்ச முழுப் புலைய மாதர்களாம்
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்
றெள் அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே.

27. பண்ண முடியாப் பரிபவம் கொண்டு இ உலகில்
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன்
உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும்
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

28. வெம் கொளித் தேள் போன்ற வினையால் வெதும்பி மனம்
அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன்
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

29. பித்தளைக்கும் காமப் பெரும் பேய் மயக்கும் மயல்
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம்
கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே.

30. ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ
அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல்
சொல் ஐயோ ஒற்றியூர்த் தூய திரு_கோயிலுள் நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

31. நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய்
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டு அவமே
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.