திருவருட்பா
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குணப் பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
2. சீத நாள்_மலர்ச் செல்வனும் மா மலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாள்-தொறும் பற்று அறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்து அருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும்
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
3. என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்
றன்னை வேண்டிச் சரண்புகுந்தேன் என்னைத் தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண்
அன்னை வேண்டி அழும் மகப் போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
4. நீண்ட மால் அரவு ஆகிக் கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும்
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
5. தஞ்சம் என்று உனைச் சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்தச் சகத்தவர் போலவே
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன்
விஞ்ச நல் அருள் வேண்டித் தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
6. கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றிக் கழறுகின்றேன் எனது
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல்
வள்ள மா மலர்ப் பாதப் பெரும் புகழ் வாழ்த்தி நாத் தழும்பு ஏற வழங்குவாய்
வெள்ள வேணிப் பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
7. மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை
எண்ணிலாச் சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ
வெண்ணிலா முடிப் புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
8. ஆணிலே அன்றி ஆர்_உயிர்ப் பெண்ணிலே அலியிலே இ அடியனைப் போலவே
காணிலேன் ஒரு பாவியை இப் பெருங் கள்ள நெஞ்சக் கடையனை மாயையாம்
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
9. வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர்
தோளிலே இடைச் சூழலிலே உந்திச் சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின்
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
10. நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணிப் புகழவும்
ஓவு இலாது உனைப் பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய்
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கரக் கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே