Irai Elimaiyai Viyathal

திருவருட்பா

ஆறாம் திருமுறை

இறை எளிமையை வியத்தல்
0:00
0:00
🔊

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.

2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

3. வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

4. ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

5. பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.

6. ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.

7. கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.

8. பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.

9. கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.

10. அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.

திருச்சிற்றம்பலம்

1. பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான்
பயப்படவும்_மாட்டேன் நும் பதத் துணையே பிடித்தேன்
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர்
மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன்
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன்
கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால்
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன்
நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே.

2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடை அறியாக் கால் காட்டித் தரம் பெறவும் அளித்தீர்
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா
வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்த உடம்பினராம்
புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர்
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர்
நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

3. வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும்
மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்தப்
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய
பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே
பகர் பிரணவாகாரப் பரிசும் எனக்கு அளித்தீர்
நாதாந்தத் தனிச் செங்கோல் நான் செலுத்தக் கொடுத்தீர்
நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

4. ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்கத் தெரியா
அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர்
இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்கப்
பார் நீடத் திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர்
பகரும் எலாம் வல்ல சித்திப் பண்புறவும் செய்தீர்
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே
நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

5. பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன்
பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை
ஆயிரமாயிரம் கோடி நா_உடையோர் எனினும்
அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இச் சிறியேன்
வாய் இரங்கா வகை புகலத் துணிந்தேன் என்னுடைய
மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய்
திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே.

6. ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன்
உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய்
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல்
கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன்
நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.

7. கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது
கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர்
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற
என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாமப்
பெண் உடைய மனம் களிக்கப் பேர்_உலகம் களிக்கப்
பெத்தரும் முத்தரும் மகிழப் பத்தர் எலாம் பரவ
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய
வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே.

8. பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர்
புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர்
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய
தனித் தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும்
இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர்
என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே.

9. கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர்
கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன்
துரும்பின் மிகச் சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன்
துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்தத் தருணம்
விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன்
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள்
பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே.

10. அ நாளில் அடிச் சிறியேன் அம்பல வாயிலிலே
அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன்
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு
முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்தச்
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன்
சிந்தை மலர்ந்து இருந்தேன் அச் செல்வம் மிகு திரு_நாள்
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன்
என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே.