திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசே
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே.
2. துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண் டேனே.
3. சிதத்திலே ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே.
4. உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
5. புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே.
6. பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
7. பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண் டேனே.
8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
9. என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
10. புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
11. ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண் டேனே.
12. துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
13. நனவிலும் எனது கனவிலும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
14. கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே.
15. களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் னமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
16. சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே.
17. ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண் டேனே.
18. சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
19. சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நிதியைக் கண்டுகொண் டேனே.
20. அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
21. சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
22. அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
23. பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே.
24. கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே.
25. மும்மையை எல்லாம் உடையபே ரரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே
ரன்பனைக் கண்டுகொண் டேனே.
26. கருத்தனை எனது கண்அனை யவனைக்
கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை
உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண் டேனே.
27. வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங் காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
28. உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.
29. புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
30. பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
திருச்சிற்றம்பலம்
1. அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை
அருள்_பெரும்_ஜோதியை அரசை
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியை மெய்ப்பொருளைத்
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான
தீபத்தைக் கண்டுகொண்டேனே.
2. துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ளத்
துரிசு எலாம் தொலைத்த மெய்ச் சுகத்தை
என் பொலா மணியை என் சிகாமணியை
என் இரு கண்ணுள் மா மணியை
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை
அருள்_பெரும்_ஜோதியை அடியேன்
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண்டேனே.
3. சிதத்திலே ஊறித் தெளிந்த தெள் அமுதைச்
சித்து எலாம் வல்ல மெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப் பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வை எம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தை மா மந்திரம்-தன்னை
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட
இறைவனைக் கண்டுகொண்டேனே.
4. உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த
ஒரு பெரும் பதியை என் உவப்பைப்
புணர்ந்து எனைக் கலந்த போகத்தை எனது
பொருளை என் புண்ணியப் பயனைக்
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த
குருவை எண்_குணப் பெருங் குன்றை
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த
வள்ளலைக் கண்டுகொண்டேனே.
5. புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட
பொன்_சபை அப்பனை வேதம்
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியாது என்னை
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து
மன்னிய பதியை என் வாழ்வை
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா
இறைவனைக் கண்டுகொண்டேனே.
6. பண்ணிய தவமும் பலமும் மெய்ப் பலம் செய்
பதியுமாம் ஒரு பசுபதியை
நண்ணி என் உளத்தைத் தன் உளம் ஆக்கி
நல்கிய கருணை_நாயகனை
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த
இறைவனை மறை முடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன் நிகர் இல்லாத்
தந்தையைக் கண்டுகொண்டேனே.
7. பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த
சாமியைத் தயாநிதி-தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வை என் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரை என் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண்டேனே.
8. ஆதியை ஆதி அந்தம் ஈது என உள்
அறிவித்த அறிவை என் அன்பைச்
சோதியை எனது துணையை என் சுகத்தைச்
சுத்த சன்மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்த மா நிதியை
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை
ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.
9. என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி
என்னை வாழ்விக்கின்ற பதியைப்
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே
பொருந்திய மருந்தை என் பொருளை
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்க
வைத்த சன்மார்க்க சற்குருவைக்
கொன் செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண்டேனே.
10. புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில்
போந்து அருள் அளித்த சற்குருவைக்
கல் நிகர் மனத்தைக் கரைத்து என் உள் கலந்த
கருணை அம் கடவுளைத் தனது
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே
தோளுறப் புனைந்த மெய்த் துணையைத்
தன் நிகர் இல்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண்டேனே.
11. ஏங்கலை மகனே தூங்கலை என வந்து
எடுத்து எனை அணைத்த என் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடைய என் ஒரு பெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண்டு எல்லாப்
பரிசும் இங்கு அளித்த தற்பரத்தைத்
தாங்கும் ஓர் நீதித் தனிப் பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண்டேனே.
12. துன்புறேல் மகனே தூங்கலை என என்
சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை
அன்பு உளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி
இனிது அமர்ந்து அருளிய இறையை
வன்பு இலாக் கருணை மா நிதி எனும் என்
வள்ளலைக் கண்டுகொண்டேனே.
13. நனவினும் எனது கனவினும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி
வழங்கிய பெரும் தயாநிதியைச்
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த
சிவ குரு பதியை என் சிறப்பை
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில்
ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.
14. கரும்பில் இன் சாற்றைக் கனிந்த முக்கனியைக்
கருது கோல்_தேன் நறும் சுவையை
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை
ஆவியை ஆவியுள் கலந்த
பெரும் தனிப் பதியைப் பெரும் சுகக் களிப்பைப்
பேசுதற்கு அரும் பெரும் பேற்றை
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண்டேனே.
15. களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்துக்
களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை
உளம்கொளும் தேனை உணவு உணத் தெவிட்டாது
உள்ளகத்து ஊறும் இன் அமுதை
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள்
மணியை என் வாழ்க்கை மா நிதியைக்
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும்
குருவை யான் கண்டுகொண்டேனே.
16. சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம் புரி சிவத்தைப்
பதம் தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதி சிவ பதத்தைத் தற்பதத்தை
இதம் தரும் உண்மைப் பெரும் தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதம் தரும் சச்சிதானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண்டேனே.
17. ஆரண முடி மேல் அமர் பிரமத்தை
ஆகம முடி அமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய_காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண்டேனே.
18. சுத்த வேதாந்த பிரம ராசியத்தைச்
சுத்த சித்தாந்த ராசியத்தைத்
தத்துவாதீதத் தனிப் பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில்
தெளிந்த பேர்_ஆனந்தத் தெளிவை
வித்த மா வெளியைச் சுத்த சிற்சபையின்
மெய்மையைக் கண்டுகொண்டேனே.
19. சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபை நடம் புரிகின்ற தனியைத்
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய்ச் சார்வைச்
சத்துவ நித்த சற்குருவை
அமைய என் மனத்தைத் திருத்தி நல் அருள்
ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை
நிமல நிற்குணத்தைச் சிற்குணாகார
நீதியைக் கண்டுகொண்டேனே.
20. அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும்
அருள்_பெரும்_சோதியை உலகக்
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும்
காட்சியைக் கருணை அம் கடலை
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண்டேனே.
21. சார் கலாந்தாதிச் சடாந்தமும் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார் பெறாப் பதத்தைப் பதம் எலாம் கடந்த
பரம சன்மார்க்க மெய்ப் பதியைச்
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.
22. அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும்
அறிந்திடப்படாத மெய் அறிவைப்
படி முதல் அண்டப் பரப்பு எலாம் கடந்த
பதியிலே விளங்கும் மெய்ப் பதியைக்
கடிய என் மனனாம் கல்லையும் கனியில்
கடைக்கணித்து அருளிய கருணைக்
கொடி வளர் இடத்துப் பெரும் தயாநிதியைக்
கோயிலில் கண்டுகொண்டேனே.
23. பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும்
பற்று அறத் தவிர்த்து அருள் பரிசும்
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு
நல்கிய நண்பை நல் நாத
இயம் உற எனது குளம் நடு நடம் செய்
எந்தையை என் உயிர்க்குயிரைப்
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்பு உறக் கண்டுகொண்டேனே.
24. கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை
வரவு_போக்கு அற்ற சின்மயத்தை
அலை அறு கருணைத் தனிப் பெருங் கடலை
அன்பினில் கண்டுகொண்டேனே.
25. மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை
முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம்
வியப்புற அளித்த மெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்-பால்
சேர்ந்திடப் புரி அருள் திறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என் பேர்
அன்பனைக் கண்டுகொண்டேனே.
26. கருத்தனை எனது கண்_அனையவனைக்
கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த
ஒருத்தனை என்னை உடைய நாயகனை
உண்மை வேதாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திரு_சிற்
றம்பலத்து அருள் நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண்டேனே.
27. வித்து எலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்க வல்லவனை
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான
சபைத் தனித் தலைவனைத் தவனைச்
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம்
தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.
28. உத்தர ஞான சித்திமாபுரத்தின்
ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற
ஒருவனை உலகு எலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண்டேனே.
29. புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவு அறத் தெளிந்த அமுது அளித்து அழியா
வாழ்க்கையில் வாழவைத்தவனைத்
தலைவனை ஈன்ற தாயை என் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண்டேனே.
30. பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த
பரமனை என் உளே பழுத்த
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞானப்
பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளைத்
தனியனை ஈன்ற தாயை என் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண்டேனே.