திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசே
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே.
2. துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண் டேனே.
3. சிதத்திலே ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே.
4. உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
5. புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே.
6. பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
7. பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண் டேனே.
8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
9. என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
10. புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
11. ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண் டேனே.
12. துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
13. நனவிலும் எனது கனவிலும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
14. கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே.
15. களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் னமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
16. சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே.
17. ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண் டேனே.
18. சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
19. சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நிதியைக் கண்டுகொண் டேனே.
20. அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
21. சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
22. அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
23. பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே.
24. கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே.
25. மும்மையை எல்லாம் உடையபே ரரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே
ரன்பனைக் கண்டுகொண் டேனே.
26. கருத்தனை எனது கண்அனை யவனைக்
கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை
உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண் டேனே.
27. வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங் காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
28. உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.
29. புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
30. பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.