Kankolak Katsi Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு
ஆண்டானைச் சிறு நெறிகள் அடையாது என்னைத்
தடுத்தானைப் பெரு நெறிக்குத் தடை தீர்த்தானைத்
தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால்
கொடுத்தானைக் குற்றம் எலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமய மதக் குழி-நின்று என்னை
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

2. விரித்தானைக் கருவி எலாம் விரிய வேதம்
விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்குத்
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானைச்
சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானே நான் ஆகி என்றும்
தழைத்தானை எனைத் தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

3. நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே
நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானைத்
துன்பம் எலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள
எட்டானை என்னளவில் எட்டினானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

4. சோற்றானைச் சோற்றில் உறும் சுகத்தினானைத்
துளக்கம் இலாப் பாரானை நீரானானைக்
காற்றானை வெளியானைக் கனலானானைக்
கருணை நெடும் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான் காணத் தோற்றினானைச்
சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம்
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

5. சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு
செறியாத மனம் செறியச் செம்பொன்_தாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற
ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாராதானைப்
பார்ப்பு அறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

6. முளையானைச் சுத்த சிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலானானைக்
களையானைக் களங்கம் எலாம் களைவித்து என்னைக்
காத்தானை என் பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம்_விளைவித்தானை
வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பு_இலானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

7. புயலானை மழையானை அதிர்ப்பினானைப்
போற்றிய மின்_ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயல் எல்லாம் திகழ்வித்தானைத்
திரு_சிற்றம்பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு_உளானை
அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலானானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

8. தாயானைத் தந்தை_எனக்கு_ஆயினானைச்
சற்குருவும்_ஆனானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண் காண விளங்கினானை
மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை
வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி
ஏயானைத் துரிய நடு_இருக்கின்றானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

9. தழைத்தானைத் தன்னை ஒப்பார்_இல்லாதானைத்
தானே தான்_ஆனானைத் தமியனேனைக்
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானைக்
குறை கொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை
அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால்
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

10. உடையானை அருள் சோதி உருவினானை
ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டு
கொண்டானைக் கொல்லாமை குறித்திடாரை
அடையானைத் திரு_சிற்றம்பலத்தினானை
அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்
னிடையானை என் ஆசை எல்லாம் தந்த
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.