Kanten Kaninten Kalanten Enal Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என்
அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியை
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த
வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியைக்
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

2. திருத் தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலாத்
திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை
உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனைச் சிவனை
நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச் சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

3. பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியைப்
பசுபதியைக் கனக_சபாபதியை உமாபதியைத்
தேட்டம் மிகும் பெரும் பதியைச் சிவபதியை எல்லாம்
செய்ய வல்ல தனிப் பதியைத் திகழ் தெய்வப் பதியை
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை
ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

4. மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை
வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியைத்
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியைச்
சுயம் சோதித் திரு_மணியைச் சுத்த சிவ மணியை
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை
விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியைக்
கதித்த சுக மய மணியைச் சித்த சிகாமணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

5. மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள்
வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும்
அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னைத்
தேற்றம் மிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னைக்
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ணப் பொன்னைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

6. ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும்
அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை
வேய் தரு தத்துவப் பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல் இல்லாத தனிச் சுயம் சோதிப் பொருளைச்
சுத்த சிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல் இல்லாது என்னைக் காத்த அருள் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

7. திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும்
அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும்
பொருத்தும் மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர்-தம்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

8. கோணாத நிலையினராய்க் குறி குணம் கண்டிடவும்
கூடாத வண்ணம் மலைக் குகை முதலாம் இடத்தில்
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி
உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடித்
தூணாக அசைதல் இன்றித் தூங்காது விழித்த
தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும்
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

9. நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும்
நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம்
ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும்
வேட்டாசைப் பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற
வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனை என் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

10. மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல
வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத்
தருணம்-அது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த
தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப்
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக்
கருணை அருள்_பெரும்_சோதிக் கடவுளை என் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.