Kanten Kaninten Kalanten Enal

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

2. திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

3. பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

4. மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

5. மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

6. ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

7. திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

8. கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

9. நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

10. மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.