திருவருட்பா
இரண்டாம் திருமுறை
14. காட்சிப் பெருமிதம்
திருவலிதாயம்
கலிவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
2. சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தை யேவலி தாயத்த லைவநீ
கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
3. வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீபழஞ்
சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
4. பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
மன்னும் மாமணி யேவல்லி கேசனே
உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
5. கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
6. ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
7. துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
8. மாசில் சோதிம ணிவிளக் கேமறை
வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
9. தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
10. மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
வல்லி தாயம ருவிய நாதனே
புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.
திருச்சிற்றம்பலம்
1. திரை படாத செழும் கடலே சற்றும்
உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ்
வரைபடாது வளர் வல்லி கேச நீ
தரை படாக் கந்தை சாத்தியது என்-கொலோ.
2. சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ.
3. வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர் வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீ பழம்
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ
4. பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே
மன்னும் மா மணியே வல்லி கேசனே
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையைத்
துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே
5. கடுத்த தும்பிய கண்ட அகண்டனே
மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ
தொடுத்த கந்தையை நீக்கித் துணிந்து ஒன்றை
உடுத்துவார் இலையோ இ உலகிலே.
6. ஆல் அடுத்த அரும் பொருளே திரு
மால் அடுத்து மகிழ் வல்லி கேச நீ
பால் உடுத்த பழம் கந்தையைவிடத்
தோல் உடுப்பதுவே மிகத் தூய்மையே
7. துன்னும் மா மருந்தே சுடரே அருள்
மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றி நிற்பீர் எனில்
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே.
8. மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை
வாசி மேவிவரும் வல்லி கேச நீர்
தூசில் கந்தையைச் சுற்றி ஐயோ பர
தேசி போல் இருந்தீர் என்-கொல் செய்வனே.
9. தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம்
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர்
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவரோ சொலும் ஐயரே.
10. மெல்லிதாய விரை மலர்ப் பாதனே
வல்லிதாயம் மருவிய நாதனே
புல்லிதாய இக் கந்தையைப் போர்த்தினால்
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே.