திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

15. கொடைமடப் புகழ்ச்சி
கொடைமடப் புகழ்ச்சி
0:00
0:00
🔊

திருவொற்றியூர்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

2. வெள்ளி மாமலை வீடென உடையீர்
விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

3. கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
களிக்க வேபடிக் காசளித் தருளும்
வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

4. அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

5. சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
உந்தி வந்தவ னோடரி ஏத்த
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

6. கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

7. துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
அடிய னேன்அலை கின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

8. குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

9. பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

10. தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

திருச்சிற்றம்பலம்

1. திரப்படும் திருமால் மயன் வாழ்த்தத்
தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர்
வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர்
உரப்படும் தவத்தோர் துதித்து
ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

2. வெள்ளி மா மலை வீடு என உடையீர்
விளங்கும் பொன்_மலை வில் எனக் கொண்டீர்
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர்
ஏழையேன் குறை ஏன் அறியீரோ
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

3. கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும்
களிக்கவே படிக்காசு அளித்து அருளும்
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள அரும் புகழ்த் தியாகர் என்று ஒரு பேர்
ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

4. அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர்
ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர்
தேவரீருக்குச் சிறுமையும் உண்டோ
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

5. சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மைச்
சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல்
என் சொலார் உமை இ உலகத்தார்
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

6. கல்லையும் பசும்பொன் எனப் புரிந்த
கருணை கேட்டு உமைக் காதலித்து இங்கு
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும்
இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர்
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

7. துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
தோன்றலே உமைத் துணை என நம்பி
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க
அடியனேன் அலைகின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

8. குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம் எனக் கொளும் குண_கடல் என்றே
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல்
கடையனேன் எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

9. பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறு எனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும் அடி அன்றி ஓர் துணையும்
அறிந்திலேன் இஃது அறிந்து அருளீரேல்
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

10. தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன்
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால்
வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர்
கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த
குணத்தினீர் என்றன் குறை அறியீரோ
ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான்
ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.