திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
2. போக மாதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
3. விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
4. மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
5. கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
6. தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
7. வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
8. துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப் புகுவேன்
தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
9. கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே
வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
நாய காஎனை நயந்துகொண் டருளே.
10. இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.