Mahadeva Maalai Vallalar Songs

திருவருட்பா​

முதல் திருமுறை

பிரித்து படிக்கும் முறை

காப்பு
திருச்சிற்றம்பலம்

1. கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து
உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற
கண்_உடையோய் சிதையா ஞானப்
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற
மலர்_வாயோய் பொய்யனேன்-தன்
மருள் நிறைந்த மனக் கருங்கல் பாறையும் உள்
கசிந்து உருக்கும் வடிவத்தோயே

2. உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள
உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகிக்
கலக நிலை அறியாத காட்சி ஆகிக்
கதி ஆகி மெய்ஞ்ஞானக் கண்-அது ஆகி
இலகு சிதாகாசம் அதாய்ப் பரமாகாச
இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி
அலகு_இல் அறிவானந்தம் ஆகிச் சச்சி
தானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே

3. உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி
யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகிக்
களங்கம்_அற்ற அருண் ஞானக் காட்சி ஆகி
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி
மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி
இலகு பராபரமாய்ச் சிற்பரமாய் அன்பர்
இதய_மலர் மீது இருந்த இன்பத் தேவே

4. வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி
விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகிக்
கொத்து ஆகிப் பயன் ஆகிக் கொள்வோன் ஆகிக்
குறைவு ஆகி நிறைவு ஆகிக் குறைவு_இலாத
சத்து ஆகிச் சித்து ஆகி இன்பம் ஆகிச்
சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி
முத்து ஆகி மாணிக்கம் ஆகித் தெய்வ
முழு வயிரத் தனி மணியாய் முளைத்த தேவே

5. வேதாந்த நிலை ஆகிச் சித்தாந்தத்தின்
மெய் ஆகிச் சமரசத்தின் விவேகம் ஆகி
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின்
நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற
முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும்
மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே

6. தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்
துவிதமாய்க் கேவலாத்துவிதம் ஆகிச்
சான்ற சுத்தாத்துவிதமாய்ச் சுத்தம் தோய்ந்த
சமரசாத்துவிதமுமாய்த் தன்னை அன்றி
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும்
உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்று அருளும் தாய் ஆகித் தந்தை ஆகி
எழில் குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே

7. பரம் ஆகிச் சூக்குமமாய்த் தூலம் ஆகிப்
பரமார்த்த நிலை ஆகிப் பதத்தின் மேலாம்
சிரம் ஆகித் திரு_அருளாம் வெளியாய் ஆன்ம
சிற்சத்தியாய்ப் பரையின் செம்மை ஆகித்
திரம் ஆகித் தற்போத நிவிர்த்தி ஆகிச்
சிவம் ஆகிச் சிவாநுபவச் செல்வம் ஆகி
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி
ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே

8. இந்தியமாய்க் கரணாதி அனைத்தும் ஆகி
இயல் புருடனாய்க் கால பரமும் ஆகிப்
பந்தம் அற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி
மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற
அந்தம்_இல் தொம்பதமாய்த் தற்பதமாய் ஒன்றும்
அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.

9. நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா
நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
தன்மயமாய்த் தற்பரமாய் விமலம் ஆகித்
தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகசம் ஆகிச்
சின்மயமாய்ச் சிற்பரமாய் அசலம் ஆகிச்
சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி
மனாதீதமாய் அமர்ந்த மவுனத் தேவே

10. அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர்
அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம்
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே
ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகிப்
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய்ப்
பிறங்குகின்ற பெரும் கருணைப் பெரிய தேவே

11. வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி
மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகிக்
காய் ஆகிப் பழம் ஆகித் தருவாய் மற்றைக்
கருவி கரணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாய் ஆகித் தந்தையாய்ப் பிள்ளை ஆகித்
தான் ஆகி நான் ஆகிச் சகலம் ஆகி
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி
ஒன்று ஆகிப் பல ஆகி ஓங்கும் தேவே

12. அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும்
அளவு ஆகி அளவாத அதீதம் ஆகிப்
பிண்டங்கள் அனந்த வகை ஆகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருள் ஆகிப் பேதம் தோற்றும்
பண்டங்கள் பல ஆகி இவற்றைக் காக்கும்
பதி ஆகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டு எங்கும் நிழல் பரப்பித் தழைந்து ஞானக்
கொழும் கடவுள் தரு ஆகிக் குலவும் தேவே

13. பொன் ஆகி மணி ஆகிப் போகம் ஆகிப்
புறம் ஆகி அகம் ஆகிப் புனிதம் ஆகி
மன் ஆகி மலை ஆகிக் கடலும் ஆகி
மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி
முன் ஆகிப் பின் ஆகி நடுவும் ஆகி
முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும்
மின் ஆகிப் பரவி இன்ப_வெள்ளம் தேக்க
வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே

14. அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி
அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகிப்
பெரிது ஆகிப் பெரியதினும் பெரியது ஆகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்காநின்ற
கரிது ஆகி வெளிது ஆகிக் கலைகள் ஆகிக்
கலை கடந்த பொருள் ஆகிக் கரணாதீதத்
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மைச்
செழும் கிரணச் சுடர் ஆகித் திகழும் தேவே

15. உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி
உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய்
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி
அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய்க்
குரு ஆகிச் சத்துவ சிற்குணத்தது ஆகிக்
குணரகிதப் பொருள் ஆகிக் குலவாநின்ற
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி
மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே

16. சகலமாய்க் கேவலமாய்ச் சுத்தம் ஆகிச்
சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை ஆகி
அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி
இக உறாத் துணை ஆகித் தனியது ஆகி
எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும்
உகல் இலாத் தண் அருள் கொண்டு உயிரை எல்லாம்
ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவாத் தேவே

17. வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகித்
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டாச்
சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசம் உறாப் பதி ஆகிப் பசுவும் ஆகிப்
பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி
நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே

18. சகம் ஆகிச் சீவனாய் ஈசன் ஆகிச்
சதுமுகனாய்த் திருமாலாய் அரன்-தான் ஆகி
மகமாயை முதலாய்க் கூடத்தன் ஆகி
வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி
இகம் ஆகிப் பதம் ஆகிச் சமய கோடி
எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்
பகம் ஆகிப் பரம் ஆகிப் பரமம் ஆகிப்
பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே

19. விதி ஆகி அரி ஆகிக் கிரீசன் ஆகி
விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி
நிகழ் நாதமாய்ப் பரையாய் நிமலானந்தப்
பதி ஆகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகிக்
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம்
கடந்துநின்று நிறைந்த பெரும் கருணைத் தேவே

20. மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி
மற்றவையால் காணாத வானம் ஆகி
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே
நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட
தான் ஆகித் தான்_அல்லன் ஆகித் தானே
தான் ஆகும் பதம் ஆகிச் சகச ஞான
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற
மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே

21. மந்திரமாய்ப் பதம் ஆகி வன்னம் ஆகி
வளர் கலையாய்த் தத்துவமாய்ப் புவனம் ஆகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகித்
தானவராய் வானவராய்த் தயங்காநின்ற
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகித்
தான் ஆகித் தனது ஆகித் தான் நான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கு அப்பாலாய்
அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே

22. மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும்
வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற
நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேதக்
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும்
கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும்
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும்
தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய்த் தேவே

23. பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற
பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும்
கற்கின்றோர்க்கு இனிய சுவைக் கரும்பே தான
கற்பகமே கற்பகத் தீம் கனியே வாய்மைச்
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
தோற்றுகின்ற திரு_அருள் சீர்ச் சோதியே விண்
நிற்கின்ற சுடரே அச் சுடருள் ஓங்கும்
நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே

24. தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கித்
திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை
மாசு விரித்திடும் மனத்தில் பயிலாத் தெய்வ
மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற
காரணமே சாந்தம் எனக் கருதாநின்ற
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்காச்
சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே

25. கோவே எண்_குணக் குன்றே குன்றா ஞானக்
கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோனக்
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன்
கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வானத்
தேவே அத் தேவுக்கும் தெளிய ஒண்ணாத்
தெய்வமே வாடாமல் திகழ் சிற்போதப்
பூவே அப் பூவில் உறு மணமே எங்கும்
பூரணமாய் நிறைந்து அருளும் புனிதத் தேவே

26. வானே அ வான் உலவும் காற்றே காற்றின்
வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில்
தான் ஏயும் புவியே அப் புவியில் தங்கும்
தாபரமே சங்கமமே சாற்றுகின்ற
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து
உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின்
தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே

27. விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள்
வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன்
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள்
கலந்துநின்ற கதிரே அக் கதிரின் வித்தே
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த
தண் அமுதே தண் அமுத சாரமே சொல்
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின்
பயனே மெய்த் தவர் வாழ்த்திப் பரவும் தேவே

28. மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தா
மரை மலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோனப்
புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும்
அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும்
தூணே சிற்சுகமே அச் சுகம் மேல் பொங்கும்
சொரூபானந்தக் கடலே சோதித் தேவே

29. பூதமே அவை தோன்றிப் புகுந்து ஒடுங்கும்
புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத
வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே
நாதமே நாதாந்த நடமே அந்த
நடத்தினை உள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதம் எலாம் கடந்துநின்ற
பூரணமே யோகியருள் பொலிந்த தேவே

30. ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த
நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற
காலமே காலம் எலாம் கடந்த ஞானக்
கதியே மெய்க் கதி அளிக்கும் கடவுளே சிற்
கோலமே குணமே உள் குறியே கோலம்
குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட
செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே

31. தத்துவமே தத்துவாதீதமே சிற்
சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம்
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும்
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
சுகப் பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே

32. யோகமே யோகத்தின் பயனே யோகத்து
ஒரு முதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்
புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்து
இறையே அ இறை புரியும் இன்பே அன்பர்
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு
மோனமே மோனத்தின் முளைத்த தேவே

33. காட்சியே காண்பதுவே ஞேயமே உள்
கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன
வயங்குகின்ற வாழ்வே மா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற
துரியமே துரிய முடிச் சோதித் தேவே

34. மறை முடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோனக்
கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளைப்
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலைப்
பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற
இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே

35. கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும்
குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும்
வான் அமுதே ஆனந்த_மழையே மாயை
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில்
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த
செல்வமே எல்லை_இலாச் சீர்மைத் தேவே

36. அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும்
ஆனந்தத் தனி மலையே அமல வேதப்
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கிப்
பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி
இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு
தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே

37. அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை
அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர்
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை
ஒன்று கடந்து இரண்டு கடந்து உணரச் சூழ்ந்த
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம்
கடந்து நிறைவான சுகக் கடலே அன்பர்
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன
வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே

38. வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள்
மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும்
இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம்
ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பிப் பொங்கி
எழும் கருணைப் பெருக்கு ஆறே இன்பத் தேவே

39. தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீசத்
தடம் பொழில் பூ மணம் வீசத் தென்றல் வீச
எண் அமுதப் பளிக்கு நிலாமுற்றத்தே இன்
இசை வீசத் தண் பனி_நீர் எடுத்து வீசப்
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்டப்
பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக்
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம்
கலந்துகொளத் தரும் கருணைக் கடவுள் தேவே

40. சுழியாத அருள் கருணைப் பெருக்கே என்றும்
தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான்
ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு
ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தினாலும்
விழைதரு மெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய்ச் சுத்த
மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே

41. சொல் ஒழியப் பொருள் ஒழியக் கரணம் எல்லாம்
சோர்ந்து ஒழிய உணர்வு ஒழியத் துளங்காநின்ற
அல் ஒழியப் பகல் ஒழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல் ஒழியப் பதர் கொள்வார் போல இன்ப
நிறைவு ஒழியக் குறை கொள் மத நெறியோர் நெஞ்சக்
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம்
கலந்துகலந்து இனிக்கின்ற கருணைத் தேவே

42. அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும்
அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு
நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம்
தலை குலையாத் தத்துவம் செய் திரோதை என்னும்
தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும்
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி
வழி_துணையே விழித் துணையுள் மணியாம் தேவே

43. வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப
வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள்
சிரம் பழுத்த பதப் பொருளே அறிவானந்தச்
சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில்
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும்
பழம் பழுத்த வான் தருவே பரம ஞானத்
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே
தினம் பழுத்துக் கனிந்த அருள் செல்வத் தேவே

44. அண்டம் எலாம் கண் ஆகக் கொளினும் காண்டற்கு
அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம்
விண்டு அலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெரும் கருணைக் கடவுளே எம்
சண்ட வினைத் தொடக்கு அறச் சின்மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே

45. பேதம் உறா மெய்ப் போத வடிவம் ஆகிப்
பெரும் கருணை நிறம் பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறாச்
சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோடு இயல் மவுனச் சுவை மேன்மேல் கொண்டு
ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும்
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும்
செழும் புனிதக் கொழும் கனியே தேவ தேவே

46. உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க
உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும்
கருணை மலர்த் தேன் பொழியும் கடவுள் காவே
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும்
வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம்
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞானச்
சோதி விரித்து ஒளிர்கின்ற சோதித் தேவே

47. கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று
கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு
அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே
காணாமல் காண்கின்ற காட்சியே உள்
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும்
அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர்
உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே

48. சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடித்
தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்துத் துளங்கி ஏங்கிப்
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற
பெரும் கருணைப் பெரு வாழ்வே பெயராது என்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகிச்
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற
சிவானந்தப் பெருக்கே மெய்ச் செல்வத் தேவே

49. பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்கு கரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம்
தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞானச்
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம்
செய்ய வல்ல கடவுளே தேவ தேவே

50. வான் காணா மறை காணா மலரோன் காணான்
மால் காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான் காணா இடத்து அதனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற
வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும்
அன்பர்-தமைக் கலந்து கொளும் அமலத் தேவே

51. மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
மீது ஏறித் தெளிந்து இச்சை விடுதல் ஏறி
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை
அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும்
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம்
கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத் தெளிந்தோர் கண்டும் காணேம்
என்கின்ற அநுபவமே இன்பத் தேவே

52. பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்
பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்று அறியாப் பெரும் பதமே பதத்தைக் காட்டும்
பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம்
ஓலமிட்டுத் தேட நின்ற ஒன்றே ஒன்றும்
கற்று அறியாப் பேதையேன்-தனக்கும் இன்பம்
கனிந்து அளித்த அருள்_கடலே கருணைத் தேவே

53. மெய் உணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
வெளி ஆக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம்
புரிந்து அருளும் கருணை_வெள்ளப் பொற்பே அன்பர்
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம்
கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும்
ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மைத் தேவே

54. ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம்
உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும்
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகிச்
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம்
தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண்
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற
அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே

55. பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின்
வாராய பல பொருளும் கடலும் மண்ணும்
மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும்
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை
உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம்
அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே

56. கற்பங்கள் பல கோடி செல்லத் தீய
கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றிப்
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றிப்
புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக
நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உள் கலந்த தேவ தேவே

57. மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கிக்
கலை அகற்றிக் கருவி எலாம் கழற்றி மாயை
விட்டு அகன்று கரும மல போதம் யாவும்
விடுத்து ஒழித்துச் சகச மல வீக்கம் நீக்கிச்
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும்
சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே

58. உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற
உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற
ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ
ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே
இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும்
எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண்
கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே

59. பாங்கு உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப்
பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி
இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு
மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும்
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்
சிதானந்த அருள் சிவமே தேவ தேவே

60. எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து
இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கிப்
பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்து அரிந்து கரும மலத் தலையை வீசும்
கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி
விழுத் துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன
வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே

61. உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்
களை வினவ மற்று அவையும் காணேம் என்று
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற
வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே

62. பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும்
பார்த்து அளந்து காண்டும் எனப் பல் கால் மேவி
ஆயிரமாயிரம் முகங்களாலும் பல் நாள்
அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணா
தே இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கித்
திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரைத்
தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே

63. அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம்
அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன்
உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும்
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ
எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற
முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே

64. தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம்
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால்
அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம்
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால்
இருந்த நினைக் காண்கிலோம் என்னே என்று
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற
தன்மயமே சின்மயமே சகசத். தேவே

65. பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலைப்
பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம்
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல
எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும்
சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம்
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்றத்
தனி நின்ற பரம்பொருளே சாந்தத் தேவே

66. மணக்கும் மலர்த் தேன் உண்ட வண்டே போல
வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந்து அதீதம் ஆதற்கு
இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும்
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ
காண்ப அரிது இங்கு எவர்க்கும் எனக் கலைகள் எல்லாம்
பிணக்கு அற நின்று ஓலமிடத் தனித்து நின்ற
பெரும் பதமே மதாதீதப் பெரிய தேவே

67. பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற
பூரண சிற்சிவம் என்றும் போதானந்த
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும்
வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும்
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா
இருப்பதுவே துணிவு எனக் கொண்டு இருக்கின்றோரை
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு
விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே

68. அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம்
அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகிக்
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவிக்
கலவாமல் பல் நெறியும் கடந்து ஞானத்
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும்
திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோனப்
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண்
பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே

69. என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என்
இன் உயிர்க்குத் துணைவன் நீ என்னை ஈன்ற
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என்
அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என்
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என்
நல் குரு நீ எனைக் கலந்த நட்பு நீ என்
றன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்கும்
தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே

70. தான் ஆகித் தான் அல்லது ஒன்றும் இல்லாத்
தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி
மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகித்
தேன் ஆகித் தேனின் நறும் சுவையது ஆகித்
தீம் சுவையின் பயன் ஆகித் தேடுகின்ற
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை
நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே

71. ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன்
ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றைத்
தேன் ஏறு மலர்ச் சடை எம் சிவனே தில்லைச்
செழும் சுடரே ஆனந்தத் தெய்வமே என்
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம்
உடையானே நின் அடிச் சீர் உன்னி அன்பர்
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி
மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே

72. செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற
செழும் கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி
வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம்
அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்
நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே

73. அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும்
ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த
மன் உலகில் அடியேனை என்னே துன்ப
வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே

74. படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும் அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின்
உன் அடியே துணை என நான் உறுதியாகப்
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இப்
பேதையேன் நின் அருளைப் பெற்றோர் போல
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

75. மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை
மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன்
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல்
மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார்
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
உடையானே இது தகுமோ உணர்கிலேனே

76. மதி அணிந்த முடிக் கனியே மணியே எல்லாம்
வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்திக்
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும்
கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போலப்
பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன்
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ
இன்று எனில் இப் பாவியேன் சொல்வது என்னே

77. என் அரசே என் உயிரே என்னை ஈன்ற
என் தாயே என் குருவே எளியேன் இங்கே
தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற
சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ
மின் அரசே பெண் அமுதே என்று மாதர்
வெய்ய சிறுநீர்க் குழி-கண் விழவே எண்ணிக்
கொன் நரை சேர் கிழக் குருடன் கோல் போல் வீணே
குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே

78. அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து
அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த
இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும்
வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன்
புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்தப்
புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ

79. வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை
வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த
மூட மனம் இ உலக முயற்சி நாடிப்
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன்
பேய் பிடித்த பித்தனைப் போல் பிதற்றாநின்றேன்
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய்
என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே

80. உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம்
உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணிக்
கை குவித்துக் கண்களில் நீர் பொழிந்து நான் ஓர்
கணமேனும் கருதி நினைக் கலந்தது உண்டோ
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கிலாயோ
திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே

81. அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று
ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல்
எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி
உருள் சகடக் கால் போலும் சுழலாநின்றேன்
உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே

82. கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன்
கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும்
இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக் கேள் விடல் போல் விடுதியேல் யான்
என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே

83. அடிமைசெயப் புகுந்திடும் எம்_போல்வார் குற்றம்
ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன்
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ
குரங்கின் கை மாலை எனக் குலையாநின்றேன்
கடுமை செயப் பிறர் துணிந்தால் அடிமை-தன்னைக்
கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய்
செடிமை உளப் பாதகனேன் என் செய்வேன் நின்
திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே

84. கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும்
குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசைத்
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன்
உன் அடியர் அக் கரை மேல் உவந்து நின்றே
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும்
தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே

85. வெள்ளம் அணி சடைக் கனியே மூவர் ஆகி
விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனைக்
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம்
கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர்
உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும்
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்கச் சோபம்
பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே

86. எனை அறியாப் பருவத்தே ஆண்டுகொண்ட
என் அரசே என் குருவே இறையே இன்று
மனை அறியாப் பிழை கருதும் மகிழ்நன் போல
மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய்
தடம் கருணைப் பெரும் கடற்குத் தகுமோ கண்டாய்
அனை அறியாச் சிறு குழவி ஆகி இங்கே
அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ

87. தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்தச்
சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால்
இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும்
நாவினை என்-பால் வருந்திக் கரண்டுகின்ற
நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான்
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும்
அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே

88. எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான்
ஏதும் அறியாச் சிறியேன் எனை-தான் இங்கே
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தைச்
சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ
கம்பமுறப் பசித் தழலுங் கொளுந்த அந்தக்
கரணம் முதல் பொறி புலப் பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு இயற்றக் காம் ஆதி அரட்டர் எல்லாம்
மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய்

89. அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன்
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ
இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே
பம்பரத்தின் ஆடு இயலைப் படுத்தும் இந்தப்
பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னைக்
குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்திடாயோ

90. கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும்
காரண_காரியம் கடந்த கடவுளே நின்
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு
சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என்
பேதைமையை என் புகல்வேன் பேயனேனைப்
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ
புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே

91. பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்கப்
பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்தக்
கொன் உடையா உடல் பருக்கப் பசிக்குச் சோறு
கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச
மின்_இடையார் முடைச் சிறுநீர்க் குழி-கண் அந்தோ
வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான்
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே
எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே

92. வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்தக் கேட்டும்
அருகு அணைத்துக்கொளப் பெண் பேய் எங்கே மேட்டுக்கு
அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான
இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால்
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை
உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே

93. பொன்_மலையோ சிறிது எனப் பேர்_ஆசை பொங்கிப்
புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி
நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று
வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம்
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறைக்
கருங்கல்லோ பராய் முருட்டுக் கட்டையேயோ

94. தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும்
தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிரக் கேள்வி
விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும்
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு
செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே

95. அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட
அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள்
கொடியனேன் செய் பிழையைத் திருவுள்ளத்தே
கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம்
நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல்
என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே

96. கண் மயக்கம் பேர்_இருட்டுக் கங்குல் போதில்
கருத்து அறியாச் சிறுவனை ஓர் கடும் கானத்தே
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம்
ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின்
மண் மயக்கம்பெறும் விடயக் காட்டில் அந்தோ
மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான்
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே
மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே

97. நற்றாயும் பிழை குறிக்கக் கண்டோம் இந்த
நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில்
பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே
உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன்
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும்
பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே

98. எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள்
எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே
நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி
நன்கு மதியாது இருந்த நாயினேனைத்
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்பத்
தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள்
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில்
பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ

99. அன்பர் திருவுளம் கோயில் ஆகக் கொண்டே
அற்புதச் சிற்சபை ஓங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்கவைத்து
மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்ப வடிவு உடைப் பிறரில் பிரித்து மேலோர்
துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம்
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ
என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே

100. புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியாக் கொண்டு
பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை
உற்று ஓங்கு வஞ்ச மனக் கள்வனேனை
உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும்
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும்
வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான்
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவாச் சொல்லும்
கருத்து அறியேன் எனக்கு அருளக் கருதுவாயே

101. அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும்
ஆனந்தப் பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம்
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட
சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ
மருள் உடைய மனப் பேதை நாயினேன் செய்
வன்_பிழையைச் சிறிதேனும் மதித்தியாயில்
இருள் உடைய பவக் கடல் விட்டு ஏறேன் என்னை
ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்பத் தேவே