Muraiyeedu

திருவருட்பா

ஆறாம் திருமுறை

---
0:00
0:00
🔊

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

3. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

4. தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

5. வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

6. கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

7. சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

8. சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

9. தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

10. வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

.

திருச்சிற்றம்பலம்

1. மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன்
மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன்
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான்
செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

2. அகங்காரக் கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன்
அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன்
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனி போல இச்சை கனிந்து உழல்வேன்
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும்
மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இகம் காணத் திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

3. கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த
கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன்
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடும் காமப் பெரும் கடலை நீந்தும் வகை அறியேன்
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும்
திரு_அடி என் சென்னி மிசைச் சேர்க்க அறிவேனோ
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

4. தேகம் உறு பூத நிலைத் திறம் சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன்
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன்
உலக நடையிடைக் கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

5. வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன்
மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன்
நாதாந்தத் திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன்
நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன்
போதாந்தத் திரு_நாடு புக அறியேன் ஞான
பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

6. கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும்
கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன்
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன்
கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம்
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும்
மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

7. சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன்
சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன்
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியாக் கடல் போல்
ஆனந்தப் பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன்
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணிப் பொதுவில்
நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

8. சாகாத தலை அறியேன் வேகாத_காலின்
தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும்
அறியேன் மெய்ந் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன்
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும்
மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

9. தத்துவம் என் வசமாகத் தான் செலுத்த அறியேன்
சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை
அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்த சிவ சன்மார்க்கத் திரு_பொதுவினிடத்தே
தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

10. வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன்
திரை அறு தண் கடல் அறியேன் அக் கடலைக் கடைந்தே
தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன்
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே
ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

.