Naan Yen Piranthen

திருவருட்பா

ஆறாம் திருமுறை

நான் ஏன் பிறந்தேன்
0:00
0:00
🔊

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

2. விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.

3. அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.

4. இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.

5. ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.

6. அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.

7. பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.

8. தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.

9. இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.

10. காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.

திருச்சிற்றம்பலம்

1. குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன் அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன்
வன் மனத்துப் பெரும் பாவி வஞ்ச நெஞ்சப் புலையேன்
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன்
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே.

2. விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து
அழுது விம்முகின்ற குழவியினும் மிகப் பெரிதும் சிறியேன்
அளக்க அறியாத் துயர்க் கடலில் விழுந்து நெடும் காலம்
அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிகத் துரும்பேன்
கிளக்க அறியாக் கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன்
கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன்
களக்கு அறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ
கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே.

3. அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும்
அதிகரித்துத் துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன்
குறியாத கொடும் பாவச் சுமை சுமக்கும் திறத்தேன்
கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக் கடையேன் தீமை எலாம் உடையேன்
சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம்
அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே.

4. இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர்
இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன்
அனித்த நெறியிடைத் தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த
அறக் கடையர்-தமக்கு எல்லாம் அறக் கடையன் ஆனேன்
பனித்த மன_குரங்காட்டிப் பலிக்கு உழலும் கொடியேன்
பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன்
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது
தனிக் கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே.

5. ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன்
ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலாப் புலையேன்
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன்
செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப் பேதை மதி-அதனால் இழிந்தேன்
வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன்
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது
மெய்க் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே.

6. அரசர் எலாம் மதித்திடப் பேர்_ஆசையிலே அரசோடு
ஆல் எனவே மிகக் கிளைத்தேன் அருள் அறியாக் கடையேன்
புரசமரம் போல் பருத்தேன் எட்டி எனத் தழைத்தேன்
புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன்
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
பசை அறியாக் கருங்கல்_மனப் பாவிகளில் சிறந்தேன்
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன்
வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே.

7. பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே
பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருள் அறியாத் திருவாளர் உளம் கயக்கத் திரிவேன்
வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன்
வெருள் அறியாக் கொடு மனத்தேன் விழற்கு இறைத்துக் களிப்பேன்
வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன்
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது
திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே.

8. தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமைப் போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சி இலாச் சடம் போல இருந்தேன்
பவம் புரிவேன் கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன்
பயன் அறியா வஞ்ச மனப் பாறை சுமந்து உழல்வேன்
அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால்
ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன்
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது
நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே.

9. இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில்
இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன்
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த
நெடுஞ் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன்
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது
கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே.

10. காட்டுகின்ற உவர்க் கடல் போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடும் தூரம் ஆழ்ந்து உதவாப் படும் கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது
குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே.

.