Namachivaya Sankirtana Lagiri

திருவருட்பா

இரண்டாம் திருமுறை

நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி
0:00
0:00
🔊

திருவொற்றியூரும் திருத்தில்லையும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

2. அட்ட மூர்த்தம தாகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட ரும்பர மானந்த நிறைவை
எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடனநா யகத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

3. உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

4. மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

5. உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

6. திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

7. பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

8. உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
படையெ டுத்தவர் படைமறந் தாலும்
பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

9. வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

10. இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

 

திருச்சிற்றம்பலம்

1. சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில்
சுதந்தரம் கொடு தோன்றிய துணையைக்
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல் அவாவிய பொழில் திருவொற்றித்
தேனைத் தில்லைச் சிற்றம்பலத்து ஆடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

2. அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை
வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட அரும் பரமானந்த நிறைவை
எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடன நாயகத்தை
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

3. உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை
உலகு எலாம் புகழ் உத்தமப் பொருளைத்
தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும்
சம்புவைச் சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரம சிற்சுகத்தை
நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

4. மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை
வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரைப்
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையைப்
பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை
அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

5. உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை
உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவைக்
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

6. திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல்
சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள்
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில்
உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

7. பெற்ற தாய்-தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

8. உடை உடுத்திட இடை மறந்தாலும்
உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும்
படையெடுத்தவர் படை மறந்தாலும்
பரவை தான் அலைப்பது மறந்தாலும்
புடை அடுத்தவர் தமை மறந்தாலும்
பொன்னை வைத்த அப் புதை மறந்தாலும்
நடை அடுத்தவர் வழி மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

9. வன்மை செய்திடும் வறுமை வந்தாலும்
மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும்
பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும்
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும்
சான்ற மேலவர்-தமை அடைந்தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.

10. இன்னும் பற்பல நாள் இருந்தாலும்
இ கணம்-தனிலே இறந்தாலும்
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்து உழன்றாலும்
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.