திருவருட்பா
மூன்றாம் திருமுறை
தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்
உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.
2. மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
3. வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
4. மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
5. ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
6. ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
7. வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
8. வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
9. மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
10. தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
திருச்சிற்றம்பலம்
1. கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காணக் கிடையாக் கழல்_உடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும்
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே.
2. மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர்த்
துன்னும் அவர்-தம் திருமுன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையைக் கண்டவள் தன்
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மைப் பிரிந்து என்றே.
3. வடிக்குந் தமிழ்த் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில்
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே.
4. மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும்
தூய_மொழியார் ஒற்றியில் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள்
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே.
5. ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார்
பல்லார் சூழ்ந்து பழி தூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே.
6. ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும்
தூ வாய்_மொழியார் அவர் முன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே.
7. வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில்
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள்
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே.
8. வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியில் போய்ச் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே.
9. மாண் காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப் பொன்
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம்
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே.
10. தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றித் தேவர் புலித்
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய்
ஏசு பூத்த அலர்க் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே.