Natrunai Vilakkam

திருவருட்பா

இரண்டாம் திருமுறை

நற்றுணை விளக்கம்
0:00
0:00
🔊

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

2. காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகன் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

3. நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

4. எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

5. ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

6. மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
கலங்கு றேல்அருள் திருவெண்­ றெனது
கரத்தி ருந்தது கண்டிலை போலும்
விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

7. மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

8. கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
கண்டி லார்எனில் கைலையம் பதியை
எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

9. வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
ஊர னாருடன் சேரனார் துரங்கம்
ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
நார மார்மதிச் சடையவன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

10. தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
வலங்கொ ளும்படி என்னையும் கூட
வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

திருச்சிற்றம்பலம்

1. எஞ்சவேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

2. காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகள் ஏவினும் காலனே வரினும்
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால்
போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய்
ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ
நாவின்_மன்னரைக் கரை-தனில் சேர்த்த
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

3. நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார்
நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல்
வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான்
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற
கொடிய காமனைக் கொளுவிய நுதல் தீ
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

4. எம்மை வாட்டும் இப் பசியினுக்கு எவர்-பால்
ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும்
ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய்
செம்மை மா மலர்ப் பதங்கள் நொந்திடவே
சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன்
நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

5. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என் செய்வோம் இனி அ
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே
மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ
நாடுகின்றவர் நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

6. மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க
மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது
கரத்து இருந்தது கண்டிலை போலும்
விலங்குறாப் பெரும் காம நோய் தவிர்க்க
விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

7. மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே
எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே
கோலும் ஆயிரம்கோடி அண்டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மா மறைப் பரம்பொருள் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

8. கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர்
கண்டிலார் எனில் கைலை அம் பதியை
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே
எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி
அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

9. வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
மேவுதற்கொணா வெள்ளியங்கிரியைச்
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ
செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே
ஊரனாருடன் சேரனார் துரங்கம்
ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ
நாரம் ஆர் மதிச் சடையவன் நாமம்
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

10. தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த
தம்பிரான் திரு_தாளினை வணங்கி
வலம்கொளும்படி என்னையும் கூட
வா என்கின்றனை வாழி என் நெஞ்சே
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே
என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி
நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.