திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
குறள்வெண்பா
1. எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2. திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
திருச்சிற்றம்பலம்
குறள் வெண்பா
1. எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1. திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச்
சிவ ஞான நிலை விளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே
திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க
உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க
வயங்கு மணிப் பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படும் பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள்ள அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே.