திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால்
அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும்
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும்
திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.
2. வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா
வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல்
இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான
திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.
3. சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி
நேர் ஆதி விளக்கம்-அதாய்ப் பரை விளக்கம் ஆகி
நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும்
பேர்_ஆசை விளக்கம்-அதாய்ச் சுத்த விளக்கம்-அதாய்ப்
பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம்
திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.
4. இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக
இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகித்
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம்
சத்தியப் பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல்
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிர்_அதிசய இன்பம்
ஞான சித்திப் பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய்த்
திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்ப மயமாம்
திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.
5. எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய்
எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும்
துணிந்து அளக்க முடியாதாய்த் துரிய வெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடும் கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.
6. அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய்
அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய்
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச் செயற்கை
மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய்த்
துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய்
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
7. அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக்
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய்
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
8. பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூதப்
பகுதி முதல் பகர் நாதப் பகுதி வரையான
ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய்
இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய்
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
9. இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர்
இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம்
பரவு மற்றைப் பொருள்கள் உயிர்த் திரள்கள் முதல் எல்லாம்
பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அப் புறத்தும்
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி
விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளிப் பேர்_ஒளியாய்
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
10. ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம்
அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம்
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர்
பிரமானந்தம் சாந்தப் பேர்_ஆனந்தத்தோடு
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம்
இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
11. வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே
புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம்
விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
12. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள்
ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர்
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும்
திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார்
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார்
மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
13. ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார்
உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார்
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர்
ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்