திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
2. திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
3. துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
சோதியுட் சோதியே எனது
மதிவளர் மருந்தே மந்திர மணியே
மன்னிய பெருங்குண மலையே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே
கலந்தர சாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
4. சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
5. உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
6. மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
7. இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
8. அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
அரும்பெருஞ் சோதியே எனது
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
9. வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
உலகமும் நிறைந்தபே ரொளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
10. தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
திருச்சிற்றம்பலம்
1. அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும்
ஆனந்த போகமே அமுதே
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும் என் ஆர்_உயிர்த் துணையே
துணிவுறு சித்தாந்தப் பெரும் பொருளே
தூய வேதாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
2. திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும்
தெய்வமே மெய்ப்பொருள் சிவமே
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும் என் உயிர்ப் பெரும் துணையே
ஒரு தனித் தலைமை அருள் வெளி நடுவே
உவந்து அரசு அளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
3. துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும்
சோதியுள் சோதியே எனது
மதி வளர் மருந்தே மந்திர மணியே
மன்னிய பெரும் குண_மலையே
கதி தரு துரியத் தனி வெளி நடுவே
கலந்து அரசாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
4. சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
செல்வமே என் பெரும் சிறப்பே
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து
இருந்து அரசு அளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
5. உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே
மந்திரத்தால் பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில்
நிறைந்து அரசாள்கின்ற நிதியே
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
6. மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
மெய் அறிவானந்த விளக்கே
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே
கதிர் நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந்தப் பர வெளிக்கு
அப்பால் அரசாள்கின்ற அரசே
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
7. இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
இன்பமே என் உடை அன்பே
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல்
வெளி அரசாள்கின்ற பதியே
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
8. அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
அரும் பெரும் சோதியே எனது
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னைப்
புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில்
மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
9. வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
மா பெரும் கருணை எம் பதியே
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா
உலகமும் நிறைந்த பேர்_ஒளியே
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால்
வயங்கும் ஓர் வெளி நடு மணியே
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.
10. தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும்
தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே
நண்புகொண்டு அருளிய நண்பே
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து
வயங்கிய தனி நிலை வாழ்வே
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.