திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால்
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.
2. பெற்ற தம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே.
3. வெம் மதிக் கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக்கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே
இ மதிச் சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம் மதிக் கருணைத் திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.
4. பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால்
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
5. அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே
இப் புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே
எப் பணி இட்டாய் அப் பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
6. முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே.
7. இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன்
தன் உளப் புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனைப்
பன்னுவது என்னே இதில் அருவருப்புப் பால் உணும் காலையே உளதால்
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே.
8. அறிவு இலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பைப்
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே
செறிவு இலாக் கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன்
எறிவு இலாச் சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய்.
9. இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்
றன் சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே.
10. செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவது என்னே.
11. பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அப் பணங்களைப் பல கால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளைக் கண்டனன் இனிச் சொல்வது என்னே.
12. கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன்
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே.
13. இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும்
எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன்
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே.
14. சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும்
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.
15. இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான்
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை
துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே.
16. சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடித் தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும்
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடித்
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்.
17. உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது
ஒருமையுற்று அழியாப் பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி
இரு நிலத்து ஓங்கிக் களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே
திரு_மணிப் பொதுவில் அன்பு_உடையவராச் செய்யவும் இச்சை காண் எந்தாய்.
18. எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும்
அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய்.
19. உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில்
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடி நின்று உனையே
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய்.
20. திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில்
உரு வளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவாறு இயல்பெறப் புதுக்கி
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும்
கரு வளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சை காண் எந்தாய்.
21. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும்
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய்.
22. கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளைத்
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய்.
23. மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.
24. இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை
நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.
.