Pirivarramai

திருவருட்பா

ஆறாம் திருமுறை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.

2. செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே.

3. வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.

4. கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.

5. திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.

6. நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.

7. வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த தெவ்வாறே.

8. பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.

9. சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.

10. பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.

திருச்சிற்றம்பலம்

1. போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம்
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன்
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான்
சாக_மாட்டேன் உனைப் பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே.

2. செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள்
சொல்ல_மாட்டேன் இனிக் கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரைக்
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே

3. வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர் சிறிதும்
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான்
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.

4. கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுள் கலந்து ஒளிரும்
தருணச் சுடரே எனை ஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல்
பொருள் மெய்ப் பதியே இனித் துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே.

5. திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவாச் சுயம் சோதி
வண்ணம் பழுத்த தனிப் பழமே மன்றில் விளங்கு மணிச் சுடரே
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன்
எண்ணம் பழுத்தது இனிச் சிறியேன் இறையும் தரியேன் தரியேனே.

6. நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள்
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என்
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்தப் பழமே மேல்
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே.

7. வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டிப் பரவும் நினது மலர்ப்
பாதம் தலை மேல் சூட்டி எனைப் பணி செய்திடவும் பணித்தனை நான்
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன்
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இச் சீர் கிடைத்தது எவ்வாறே.

8. பொய் விட்டு அகலாப் புலைக் கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின்
கை விட்டு அகலாப் பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய்
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே.

9. சாமத்து இரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கம் தடுத்து மயல்
காம_கடலைக் கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய்
நாமத் தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன்
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே.

10. பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருள்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே.