திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
2. ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
3. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
4. வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
5. செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
6. முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
7. உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
8. நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
9. தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
10. பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
11. கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
திருச்சிற்றம்பலம்
1. அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன்
அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே
இப் பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி
எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின்
தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும்
துப்பு ஆகித் துணை ஆகித் துலங்கிய மெய்த் துணையே
சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே.
2. ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா
அரை_கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க_மாட்டேன்
கோணை நிலத்தவர் பேசக் கேட்டது போல் இன்னும்
குறும்பு_மொழி செவிகள் உறக் கொண்டிடவும்_மாட்டேன்
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான்
உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன்
மாணை மணிப் பொது நடம் செய் வள்ளால் நீ எனது
மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே.
3. பட முடியாது இனித் துயரம் பட முடியாது அரசே
பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான
நல் மணியே பொன் மணியே நடராச மணியே.
4. வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த
ஏழை படும் பாடு உனக்கும் திருவுளச் சம்மதமோ
இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ
மாழை மணிப் பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு
மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ
கோழை உலகு உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன்
கொடுத்து அருள் நின் அருள் ஒளியைக் கொடுத்து அருள் இப்பொழுதே.
5. செய் வகை என் எனத் திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள்
திரு_மேனி காட்டி எனைத் தெளிவித்தாய் நீயே
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே
பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன்
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே
எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன்
ஐவகை இ உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன்
அருள் சோதிப் பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே.
6. முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு
முன்னின் உருக் காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன்
இன்னும் வரக் காணேன் நின் வரவை எதிர்பார்த்தே
எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே
ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய்
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே
என் உயிர்க்குப் பெரும் துணையே என் உயிர்_நாயகனே.
7. உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும்
அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே
இன்னும் மிகக் களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்
இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே.
8. நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது
நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும்
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை
மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன்
உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன்
பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே
பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே.
9. தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை வலிந்தே
சிவ மாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள்
ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ
கருவிடத்தே எனைக் காத்த காவலனே உனது
கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான்
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி
விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே.
10. பெரியன் அருள்_பெரும்_சோதிப் பெரும் கருணைப் பெருமான்
பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த
அரிய பெரும் பேர்_ஆசைக் கடல் பெரிதே அது என்
அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே
உரிய அருள் அமுது அளித்தே நினைத் துதிப்பித்து அருள்வாய்
உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே.
11. கவலை எலாம் தவிர்ந்து மிகக் களிப்பினொடு நினையே
கை குவித்துக் கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே
சவலை மனச் சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய்த்
தானே தான் ஆகி இன்பத் தனி நடம் செய் இணைத் தாள்
தவல் அரும் சீர்ச் சொல்_மாலை வனைந்துவனைந்து
அணிந்து தான் ஆகி நான் ஆடத் தருணம் இது-தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவே என் குற்றம் எலாம் குணமாக் கொண்டவனே.