Shri Sivasanmuka Nama Shankirttana Lakiri

திருவருட்பா

இரண்டாம் திருமுறை

திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
தொழுது சண்முக சிவசிவ எனநம்
தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

2. சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
ஓது சண்முக சிவசிவ எனவே
உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

3. ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
குழக வோஎனக் கூவிநம் துயராம்
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

4. மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

5. இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
தூய என்றடி தொழுதுநாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

6. கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
பரவு சண்முக சிவசிவ சிவஓம்
பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

7. ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
வரசு யம்புசங் கரசம்பு எனவே
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

8. ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

9. கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

10. உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
நிறைந்த சண்முக குருநம சிவஓம்
நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.