Siva Dharisanam

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.

2. சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.

3. துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

4. மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.

5. முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.

6. விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

7. மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

8. பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.

9. கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.

10. காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.

11. சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.

.