sivanesa venpa vallalar songs

திருவருட்பா​

முதல் திருமுறை​

திருச்சிற்றம்பலம்

1. முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூய மெய்ச் சுகத்தவனே என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்

2. வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய்
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு
முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன்
புதல்வா நின் தாள் என் புகல்

3. சீர் சான்ற வேதச் செழும் பொருளே சிற்சொருபப்
பேர் சான்ற உண்மைப் பிரமமே நேர் சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால்
நீடும்படி நீ நிகழ்த்து

4. நினைப் பித்தா நித்தா நிமலா என நீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின்
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னால் என் பேசு

5. உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக் காண்பது எவ்வாறோ
என் தாயே என் தந்தையே

6. வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம்
உண்டோ இலையோ உரை

7. அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இப் பாரில்
சாதி உருவாக்கும் தளை அவிழ்த்துத் தன்மயமாம்
சோதி உருவாக்கும் துணை

8. பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளி ஆகி நின்ற உனை

9. வந்தித் தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம்
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே
வந்து சிந்திப்பித்தல் மறந்து

10. தேன் என்ற இன் சொல் தெரிந்து நினைப் பாடுகின்றேன்
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும்
வண் பொருளும் ஈதல் மறந்து

11. அண்டங்களோ அவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும்
எம் பெருமான் நீ வாழ் இடம்

12. பூதம் எங்கே மற்றைப் புலன் எங்கே பல்_உயிரின்
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ
பொன் வடிவம் கொள்ளாத போது

13. பேர்_உருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில்
சால்புறச் சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும்
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால்

14. இன்றோ பகலோ இரவோ வரும்_நாளில்
என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும்
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து
நாய்_அனையேன் வாழ்கின்ற நாள்

15. மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை
விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்
பட்டால் வருமே பதம்

16. தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகை சான்ற
சிந்தையாய் என் அருமைத் தேசிகனாய் முந்தையாய்
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம்
வாடும் எனை ஆட்கொள்ளாவாறு

17. ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே
ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற
அஞ்சு_புல வேடர்க்கு அறிவைப் பறிகொடுத்தென்
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை

18. ஆமோ அலவோ அறியேன் சிறியேன் நான்
தாமோதரனும் சதுமுகனும் தாமே
அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல்
அடியார் குற்றேவல் அடியன்

19. உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான்
தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன்
எந்தாய் இங்கு ஒன்றும் அறியேன்

20. சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான்
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய்
அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து

21. எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்திச்
சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தாச்
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில்
எவர் உண்டு எனைப் போல் இயம்பு

22. உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ
வெப்பு இருந்த காடோ வினைச் சுமையோ செப்ப அறியேன்
கண்ணப்பருக்குக் கனி_அனையாய் நின் பணியாது
உண்ணப் பருக்கும் உடம்பு

23. ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும்
காலாய்த் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகித்
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில்
கண்டே வலம்செய்யாக் கால்

24. ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும்
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக்
கண்டும் சிரம் குவியாக் கை

25. வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும்
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின்
சீர் சிந்தாச் சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த
நீர் சிந்தா வன்கண் நிலை

26. வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே
வாழ்த்தாதார் நாற்றப் பாழ் வாய்

27. வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர்ச்
செல்லத் துளையாச் செவி

28. புல் அங்கண நீர்ப் புழை என்கோ புற்று என்கோ
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர்
வீயாத பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல் இசை-தான்
தோயாத நாசித் துளை

29. தோற்றம் இலாக் கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ்
நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான்
கேளாச் செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான்
மூளாது பாழ்த்த முகம்

30. மான்றாம் உலக வழக்கின்படி மதித்து
மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால்
தலக் கூடல் தாழாத் தலை

31. கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்
கல் என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர்
நின் தாள் நினையாத நெஞ்சு

32. சொல்லுகின்ற உள் உயிரைச் சோர்வுற்றிடக் குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு

33. சோர்பு அடைத்துச் சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு
மார்பு அடைத்துச் சாவுகினும் மா நன்றே சீர் படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது
உண்ணுவார் உண்ணும்-இடத்து

34. ஓகோ கொடிதே உறும் புலையர் இல்லினிடத்
தே கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம்
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார்
பாழ்_மனையில் சென்று உண்பது

35. வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையைப்
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல்
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில்
ஆங்கு அவரோடு உண்ணும்-அது

36. கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில்
ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய
பூண் தாது ஆர்க் கொன்றைப் புரி சடையோய் நின் புகழை
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து

37. கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில்
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார்
போமிடத்தில் போவேன் புலர்ந்து

38. அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரைச் சார்ந்தோர்-தம்
வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில்
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்
றார் போல் அழிக தளர்ந்து

39. பூவை விட்டுப் புல் எடுப்பார் போல் உன் திரு_பாதத்
தேவை விட்டு வெம் பிறவித் தேவர்களைக் கோவையிட்டுக்
கூவுவார் மற்று அவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவார் ஆவல் உனை

40. யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்
தாதோ தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு
நாள்_தாது ஆர்க் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம்

41. என் நெஞ்சு ஓர் கோயில் எனக் கொண்டோய் நின் நினையார்-
தன் நெஞ்சோ கல்லாம் அச் சாம்_பிணத்தார் வன் நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்று அவரைத் தான் நோக்கி வார்த்தை சொல
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு

42. வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின்
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி
என் என்பது ஐயா இயம்பு

43. பண்ணால் உன் சீரினைச் சம்பந்தர் சொல வெள் எலும்பு
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அச்
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில்
தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து

44. எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில்
அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின்
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ
நாள் வருந்த வேண்டுகின்றேன் நான்

45. பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு
நாவுக்கரையர் எனும் நல் நாமம் மேவுற்ற
தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டன் என்பார் சொல்

46. எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-
தம் பரவை வீட்டுத் தலைக்கடையாய் வம்பு அணையாய்
வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாயப் பெயர் நீண்ட மால்

47. நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள்
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல்
அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால்
அம்மையார் போல் நடந்தார் ஆர்

48. வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு
மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு
நீ உரைத்த வாறு

49. ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்டப்
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை
வாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு

50. கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட
அம் கோவணத்து அழகா அம்பலவா நின் புகழை
இங்கு ஓதி வாழ்த்தாத யான்

51. ஆயாக் கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு
ஈயாக் குறையே இலை கண்டாய் மாயாற்கும்
விள்ளாத் திரு_அடிக் கீழ் விண்ணப்பம் யான் செய்து
கொள்ளாக் குறையே குறை

52. பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்கப்
பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின்
பொன்_தாள் பொறா எம் புலம்பு

53. பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார்
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக
வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை
எல்லாம் பொறுக்கின்றேன் யான்

54. முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல்
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி
இன்றும் ஒரு மணம் செய்வேன்

55. செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என்
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்
ஞான்று கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும்
ஏன்றுகொண்டால் போதும் எனக்கு

56. என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்
தின்-பாலோ அ மனத்தைச் சேர் மாயை-தன்-பாலோ
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை
ஓர் பால் கொள நின்றோய் ஓது

57. நாணவத்தினேன்-தனையோ நாயேனை மூடிநின்ற
ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில்
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள்
பாங்கு_உடையாய் தண்டிப்பது

58. எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும்
பச்சென்று இருக்கப் பகர்வார் காண் வெச்சென்ற
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை
அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து

59. கற்று அறியேன் நின் அடிச் சீர் கற்றார் கழகத்தில்
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன்
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா
என் செய்வேன் நின் அருள் இன்றேல்

60. மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என்
செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக் கேட்க
அஞ்சினேன் அன்பு இன்மையால்

61. மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்
போதே வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால்
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால்
என் செய்வேன் புகல்

62. கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய்
நின்-பால் எனைக் கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி
என்-பால் செயல் ஒன்று இலை

63. எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின்
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும்
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று
ஆங்கு ஒன்றும் இல்லாமையால்

64. தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ
ஏணில் பிறப்பித்தது இல்

65. உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின்
வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற
அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின்
எச்சம் கண்டால் போலவே

66. நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்சக்
கூத்தாடுகின்றேனைக் கொண்டு சிலர் கூத்தா நின்
பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு
வித்தம் இலா நாயேற்கும் வேறு

67. அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன்
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு
மெய்_உடையேன் என்கோ விரைந்து

68. என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை
உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்
தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை
யார்க்கும் புகல் உன் அருள்

69. வெள்ளைப் பிறை அணிந்த வேணி_பிரானே நான்
பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ளப்
பொறுத்தாள் அத் தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான்
வெறுத்தால் இனி என் செய்வேன்

70. ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும்
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண்
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு

71. வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடைச் சிக்கிய என்
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்
கரனே மழுக் கொள் கரனே அரனே
வரனே சிதம்பரனே வந்து

72. தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்து என்னை
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும்
ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின்
பாங்கான செம்பொன்_பதம்

73. ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம்
தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே தூசொலிப்பான்
கல்லாகத் தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு
எல்லா நலமும் உளதே

74. குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள்
சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல்
பொய் விட்டால் அன்றிப் புரந்து அருளேன் என்று எனை நீ
கைவிட்டால் என் செய்கேன் காண்

75. தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு
நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில்
எல்லோர்க்கும் ஐயுறவாமே

76. இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல்
அன்பு_உடையாய் நீ அமைப்பித்தாய் இதற்கு வன்பு அடையாது
எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில்
இவ்வண்ணம் என்று அறிகிலேன்

77. ஏய்ப் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர்
பேய்ப் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம்
வஞ்சம் எனத் தேகம் மறைத்து அடி மண் வையாமல்
அஞ்சி நின்னோடு ஆடும் அது

78. கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்
காடும் பிணி மூப்பும் காணார் காண் நீடு நினைக்
கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திரு_அடியைக்
கண்டார் வடிவு கண்டார்கள்

79. மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்
கோல் எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர்
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது
கண்டம் அங்கே நீலம் உறாக் கால்

80. எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற
அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான்

81. துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர்
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்கக்
காப்பான் புகழ் உன் கழல் புகழைக் கேட்பித்துக்
காப்பாய் இஃது என் கருத்து

82. என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான
இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே
காதலுற்றுத் தொண்டு செயக் காதல்கொண்டேன் எற்கு அருள் நீ
காதலுற்றுச் செய்தல் கடன்

83. ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன்
பேராத வஞ்சப் பிழை நோக்கி யாரேனும்
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால்
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு

84. மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன்
ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான
தீது செய்வேன்-தன் பிழையைச் சித்தம் குறித்திடில் யான்
யாது செய்வேன் அந்தோ இனி

85. திண்ணம் அறியாச் சிறியேன் உளத்து இருக்கும்
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால்
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின்
சித்தம் இரங்காச் செயல்

86. கொன் அஞ்சேன்-தன் பிழையைக் கூர்ந்து உற்று நான் நினைக்கில்
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர்
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன்
சிந்தாகுலன் என் செய்வேன்

87. நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனைப்
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர்
வைவமே என்னும் வறியேன் அறியேன் என்
தெய்வமே நின்றன் செயல்

88. என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்
போதோ அருள்வாய் புகல்

89. எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி
நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத
காள மகிழ் நின் களக் கருணை எண்ணு-தொறும்
மீள மகிழ்கின்றேன் விரைந்து

90. எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய்க் கொண்டு அருள் எம்
வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலே
வேண்டும் என யாரே விளம்புவார் நின் அடியர்
காண்டும் எனச் சூழ்வார் களித்து

91. வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு
நின் பொன் கழலே நிலை

92. முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய்
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாகக் கொண்டு என்னை
அற்றம் இலாது ஆள்கின்றவர்

93. கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம்
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு
ஒரு கூறு அளித்தாய் உனைத் தொழும் இ நாயேன்
இரு கூறு அளித்தேன் இடர்க்கு

94. பேசத் தெரியேன் பிழை அறியேன் பேதுறினும்
கூசத் தெரியேன் குணம் அறியேன் நேசத்தில்
கொள்ளுவார் உன் அடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
எள்ளுவார் கண்டாய் எனை

95. ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன்
வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின்
செம் பாதமே என்றும் தீராப் பொருள் என்று
நம்பாத நாய்_அடியேன் நான்

96. சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
நவமே தவமே நலமே நவமாம்
வடிவுற்ற தேவே நின் மாக் கருணை அன்றோ
படிவுற்ற என் உள் பயன்

97. கோளாக்கிக் கொள்ளுங் கொடியேனையும் நினக்கு ஓர்
ஆளாக்கிக் கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும்
செம் கேச வேணிச் சிவனே என் ஆணவத்திற்கு
எங்கே இடம் காண் இயம்பு

98. திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் திரும்பாத
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில்
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம்
எத்தனையும் போதாமை என்று

99. இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல்
தொண்டைப் பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு
உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய
நெஞ்சே பிறகிடும் காண் நின்று

100. கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை
அண்ணா அருளுக்கு அழகு அன்றே உள் நாடு
நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனைச் சேர்த்திடு-மின்
என் அடியான் என்பாய் எடுத்து

101. கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலர் உண்டு
நான் அவரைச் சேராமல் நாட்டு

102. பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றிப்
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
பிடித்தேன் உன் பொன்_பாதப் பேறு

103. துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய்
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக
வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து

104. இப் பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என்
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இப் பாரில்
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-
பால் நினது சீர் கேட்கப் பண்