திருவருட்பா
இரண்டாம் திருமுறை
07. சிவபுண்ணியத் தேற்றம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
2. போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
போக போகநீர் புலமிழந் தவமே
நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
3. தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
சீறு பாம்புகண் டெனஒளித் தேக
சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
செய்ப வன்செய லும்அவை உடனே
செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
4. தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
தழுவி யேஅதை முழுவதும் கேட்க
சேய நன்னெறி அணித்தது செவிகாள்
சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
5. நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
6. அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
7. முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
8. இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.
9. நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
நரக இல்லிடை நடப்பதை ஒழிக
ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
10. நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
திருச்சிற்றம்பலம்
1. கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள்
கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்
தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய
நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே
2. போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால்
போக போக நீர் புலம் இழந்து அவமே
நீற்றின் மேனியர்-தங்களைக் கண்டால்
நிற்க நிற்க அ நிமலரைக் காண்க
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள்
தமனியப் பெரும் தனு எடுத்து எயிலைக்
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பைக்
கைலை ஆளனைக் காணுதல் பொருட்டே
3. தெய்வ நீறு இடாச் சிறியரைக் கண்டால்
சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக
சைவ நீறு இடும் தலைவரைக் கண்காள்
சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க
செய்பவன் செயலும் அவை உடனே
செய்விப்பானுமாய்த் தில்லை அம்பலத்துள்
உய்வதே தரக் கூத்து உகந்து ஆடும்
ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே
4. தூய நீறு இடாப் பேயர்கள் ஒன்று
சொல்லுவார் எனில் புல்லென அடைக்க
தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால்
தழுவியே அதை முழுவதும் கேட்க
சேய நல் நெறி அணித்தது செவிகாள்
சேரமானிடைத் திரு_முகம் கொடுத்து
ஆய பாணற்குப் பொன் பெற அருளும்
ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே
5. நல்ல நீறு இடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே
சொல்லும் வண்ணம் இத் தூய் நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே.
6. அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும்
அமலத்தினை அருந்துதல் ஒழிக
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்தி அத் திரு அமுது உண்க
இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே
இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள்
வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே.
7. முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும்
முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே
போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி வேல் கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே.
8. இனிய நீறு இடா ஈன நாய்ப் புலையர்க்கு
எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன்
இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே.
9. நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும்
நரக இல்லிடை நடப்பதை ஒழிக
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள்
உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
கூட நல் நெறி ஈது காண் கால்காள்
குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன்
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன்
அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே.
10. நிலைகொள் நீறு இடாப் புலையரை மறந்தும்
நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும்
கருதி நின்று உளே கனிந்து நெக்குருக
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான்
மலர் அயன் தலை மன்னிய கரத்தான்
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான்
அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே.