திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
2. ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும்
இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயக நின்றனைப் பிரியாது உறுதலும் வேண்டுவனே.
3. அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும்
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும்
காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும்
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந்தப் பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும்
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்
உனைப் பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே.
4. அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திரு_சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே.
5. அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும்
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்
உரை சேர் மெய்த் திரு_வடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.
6. அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடி சேர் எவ்வுலகமும் எத் தேவரும் எவ்வுயிரும்
சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.
7. அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
இ மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே
இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும்
ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்
தம் மானத் திரு_அடிவில் எந்தாயும் நானும்
சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.
8. அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும்
எச் சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும்
எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும்
இச் சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும்
உச்ச ஆதி அந்தம் இலாத் திரு_வடிவில் யானும்
உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே.
9. அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும்
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொது சிறத்தல் வேண்டும்
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும்
எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும்
பெருமான் நின்றனைப் பாடி ஆடுதல் வேண்டுவனே.
10. அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்
திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும்
புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.
11. அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆடி நிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமன் ஆதித் தடை என்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும்
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம்
காதலித்தே திரு_பொதுவைக் களித்து ஏத்தல் வேண்டும்
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும்
விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே